பச்சோந்திகள் பட்டாம் பூச்சியாக மாறி வந்தாலும் பகற்கனவு பலிக்காது!

NEWS

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு கால கட்டத்திலும் துரோகிகளால் பல சவால்களுக்குட்பட்டு வெற்றி கண்ட வரலாறுகளுமுண்டு. தோல்வி கண்ட துரோகிகள் சந்தர்ப்பம் பார்த்து ஒவ்வொரு கால கட்டத்திலும் பல வடிவங்களில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யாமலுமில்லை.
இவ்வாறான துரோகிகளுக்கு துணையாக ஒவ்வொரு கட்டத்திலும் சிலர் கட்சியிலிருந்து பிரிந்து சேர்வதுமுண்டு. இவர்களின் பொதுவான நோக்கம் அதிகாரம் பெறுவது தான். இதற்காக இந்தக்கட்சியைப் பயன்படுத்துவது கிடைக்கவில்லையென்றால் புதிய கட்சியை உருவாக்குவதும் மரத்தை அழிப்பதற்குச்சதி செய்வதும் வேலையாக போன ஒன்றாகக் காணப்படுகிறது.
வேதாந்தி முயற்சித்தார் முடியவில்லை. பின்னர் சிலர் மயிலோடு வந்தார்கள் இறக்கை உடைந்தது தான் மிச்சம். இன்னும் சிலர் குதிரையில் வந்தார்கள் குதிரை நொண்டியாகிப் போனது தான் மிச்சம்.
இப்படி பல அவதாரமெடுத்து மரத்தை அழிக்க நினைத்து முட்டி மோதி மூக்குடைந்து போகவே இன்னும் சிலர் இந்தக்கட்சியில் தொடர்ச்சியாக அதிகாரம் கொடுக்கப்பட்டவர்கள் பின்னர் தங்களுக்கு அதிகாரம் மறுக்கப்பட கட்சித்தலைமையை குறை கூறிக்கொண்டு வெளியேறியவர்கள் இவர்களுக்கு கை கொடுக்கும் வண்ணம் அனைவரும் மீண்டும் இணைந்து உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மரத்தை அசைத்துப்பார்க்க வண்ணாத்துபூச்சியில் வலம் வருகிறார்கள்.
வண்ணாத்துபூச்சி கவனமாக இருக்க வேண்டும். மரத்தின் கிளைகள் பட்டு இறக்கைகள் உடைந்து விடும்.
இந்தக்கூட்டமைப்பின் நோக்கம் முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமையையும் அழித்து, தாங்கள் அதிகாரம் பெற வேண்டுமென்பது தான். அதை வெளிப்படையாகக் காட்ட முடியாதென்பதாலும் மக்களின் ஆதரவைப்பெற்று தங்களின் நோக்கத்தை அடையேவே முஸ்லிம் சமூகத்தின் உரிமையை வென்றேடுக்கவே இந்தக்கூட்டமைப்பு என்று போலி நாடகம் போடுகிறார்கள். இதில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
இந்த முஸ்லிம் காங்கிரஸ் பேரியக்கத்தை அழிப்பதற்காக உருவாகிய இவர்களுக்குப் பின்னணியாக பேரினவாதச்சக்திகள் செயற்பட்டு வந்திருக்கிறது.
ஏனென்றால், பேரினவாதிகளின் திட்டங்களை எதிர்ப்பவர்களாகவும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவர்களாகவும் முஸ்லிம் காங்கிரஸ் திகழ்ந்தது அவர்களுக்கு தலையிடியாக இருந்த காரணத்தினால் இவர்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து இவர்களுக்குள் சண்டையை மூட்டி விட்டால், அதனைத்தீர்ப்பதிலே இவர்களின் கவனம் திரும்பி விடும். நாம் நினைத்ததைச் சாதித்து விடலாம் என்ற எண்ணத்தில் சுயநலவாதிகளுக்கு பதவி ஆசைகளைக்காட்டி இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
இன்று சிறுபான்மை தமிழர்களின் உரிமையை வென்றேடுக்கவென உருவான தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதைந்து போவதை நாம் காண்கிறோம்.
இவைகள் நமக்கு படிப்பினை. இவ்வாறே அதிகாரப்போட்டியில் முஸ்லிம் கூட்டமைப்பும் சிதைந்து போகுமென்பது இந்த கூட்டமைப்பு தொடர்பாக ஆரம்ப நடவடிக்கை நடந்ததும் மயிலும் குதிரையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டுச் செயற்பட்டதை நன்கறிவோம்.
எனவே, முஸ்லிம் சமூகம் சிந்தித்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். மற்றவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி நமது சகோதரர்கள் நமக்காய் உயிர் கொடுத்து வளர்த்த இந்த பேரியக்கத்தை அழித்து விடக்கூடாது..
அதே போல், பச்சோந்திகளின் செயற்பாடுகளுக்கு இனியும் இடங்கொடுக்காது முழுமையாக சமூகம் அவர்களைப் புறக்கணிக்கவும் முன்வர வேண்டும்.
எம்.என்.எம்.யஸீர் அறபாத்,
ஓட்டமாவடி.
6/grid1/Political
To Top