தமது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போஸ்டர், கட்அவுட் உட்பட தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தும் விளம்பரங்கள் அனைத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்க தவறும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
போஸ்டர், கட்அவுட், பெனர் என்பன நீக்கப்படாத பிரதேசங்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மேலதிக அவதானங்களை செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தலின் போது சகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளும் கட்சி பாகுபாடின்றி கடமையாற்ற வேண்டும் என்பதோடு, அவ்வாறு கட்சி சார்பாக செயற்படும் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் பொலிஸ் தேர்தல்கள் பிரிவுக்கு அறிவிக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.