ஈரானில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டம் பல இடங்களில் வன்முறையாக மாறியுள்ள நிலையில், கலவரத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
ஈரான் நாட்டு மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை கேட்டும், ஊழலுக்கு எதிராக போராடியும் வருகின்றனர். அரசுக்கு எதிராக நாடு முழுவதிலும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
கடந்த 2009-ம் ஆண்டு அந்நாள் ஆட்சியாளர்களை எதிர்த்து வீதியில் இறங்கி போராடிய மக்களை அரசு இரும்புக்கரம் ஒடுக்கிய நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தின் இறுதியில் அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில், எட்டாவது ஆண்டாக தற்போது நடைபெற்றுவரும் மக்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் எழுச்சி பெற்றுள்ளது. அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். ஆனால், அமைதியான வழியில் போராடி வரும் அவர்களை அந்நாட்டு அரசு சிறையில் அடைத்து வருகிறது.
கடந்த வியாழக்கிழமை நாட்டின் வட-கிழக்கு பகுதியில் உள்ள மாஷாட் நகரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது. தலைநகர் டெஹ்ரானில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது.
நாட்டின் சில பகுதிகளில் அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. வங்கிகளும் தாக்குதலுக்குள்ளானதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. நான்கு நாட்களாக நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தால் 2 பேர் ஏற்கனவே பலியான நிலையில், நேற்றிரவு மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடுவதை சகித்துக்கொள்ள முடியாது என அதிபர் ரவுஹானி விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து வன்முறை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக டெலகிராம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.