கதிர்காமம் பொலிஸ் நிலையத்துக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் அப்பிரதேசத்தில் கடந்த 20 ஆம் திகதி முதல் பதற்றமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
இளைஞன் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்ததையிட்டு ஆத்திரமுற்ற பிரதேச வாசிகள் பொலிஸ் நிலையம் மீதும், பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால், 20 இற்கும் மேற்பட்ட பொலிஸார் சிறு காயங்களுக்கு உட்பட்டுள்ளனர். பொலிஸ் நிலையத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பொலிஸ் விடுதிக் கட்டிடமும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலமும் சேதமாக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக கதிர்காமம் – திஸ்ஸ பிரதான பாதையை மறைத்து டயர்களை எரித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இச்சம்பவங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இதுவரையில் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.