பாராளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ள மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் 103 பக்கங்கள் அகற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
அத்துடன் ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் முன்னர் திருடர்களின் கைகளுக்கு ஒப்படைத்துள்ளனர். அவ்வாறாயின் எப்படி நீதியான விசாரணையை எதிர்பார்க்க முடியும். மேலும் இந்த விசாரணை சட்டமா அதிபர் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவிற்கு வழங்கப்படாமல் சிவில் வழக்கு பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் மத்திய வங்கி மோசடி குற்றவாளிகள் கைது செய்யப்படமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை மத்திய வங்கியில் பாரியளவில் மோசடி நடந்துள்ளது. இதன்பிரகாரம் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்த மோசடியின் பிரதான குற்றவாளிகளான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெபச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோருக்கு அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
இது எந்த வகையில் நியாயமாகும்? இந்த அரசாங்கம் யாரை காப்பாற்ற முயற்சிக்கின்றது? இவ்வாறு அறிக்கையை திருடர்களின் கைகளில் ஒப்படைக்கும் போது எப்படி நீதியை எதிர்பார்ப்பது? அத்துடன் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில் 103 பக்கங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் சில இணை ஆவணங்களும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. இது எமக்கு பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருடர்களை பாதுகாக்க முனைகின்றார் போல் தெரிகின்றது.
மேலும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி விசாரணை சட்டமா அதிபர் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவிற்கு வழங்கப்படாமல் சிவில் வழக்கு பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் மத்திய வங்கி மோசடி குற்றவாளிகள் கைது செய்யப்படமாட்டார்கள்.
அதற்கு மாறாக சிவில் வழக்கின் பிரகாரம் மோசடி செய்யப்பட்ட நிதியையே அறிவிட திட்டமிட்டுள்ளனர். இது நியாயமற்ற செயற்படாகும். ஜனாதிபதி ஆக்ரோஷமாக கூறிய வாள் எங்கே?. திருடர்களை கைது செய்யாமல் விடுவதானது சம்பிரதாயபூர்வமான செயற்பாடுகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றார்.