Top News

எம்மிடம் திட்டமும், நிதியும் இருக்கின்றது 20120 வரை ஆட்சி நடத்த முடியும்




“இந்த நாட்டை, கடன் சுமையோடுதான் பொறுப்பேற்றோம். இன்று கடன்கள் செலுத்தப்பட்டுள்ளன. மோசமான பொருளாதார அபிவிருத்தி படிப்படியாக உயர்ந்துள்ளது. நாடு கடன் வாங்க வேண்டிய நிலையில் இப்போது இல்லை” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 நேற்று (28) இடம்பெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

“தேசிய தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுகின்றது. இதில் நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக 4 பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டு முதன் முறையாக தேர்தல் நடத்தப்படுகின்றது.

“முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், GSP வரிச் சலுகை ஏற்றுமதி வரிச் சலுகை என்பன நிறுத்தப்பட்டிருந்தன. இன்று GSP+ கிடைத்துள்ளது. ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த வருடம் மீன்பிடித் துறையின் வருமானம் 40% அதிகரித்துள்ளது. எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் எல்லா இடங்களிலும் ஏற்றுமதி வலயங்கள் அமையவுள்ளன.ஹம்பாந்தோட்டை முதல் கண்டி வரை ஏற்றுமதி வலயங்கள் உருவாகவுள்ளன. இதனால், வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். சுற்றுலாத்துறை, அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

“பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை இதுவரை இருக்கவில்லை. இந்த நாட்டின் பொருளாதரத்துக்கு உழைத்துக் கொடுக்கும் அவர்களுக்கு சொந்த வீடு, கிராமம் எதுவும் இல்லை. எனவே, 1986 இல் வாக்குரிமை கொடுத்தது போல, காணி உரிமையும் வழங்கப்பட்டு வருகின்றது, அனைவருக்கும் காணி உரிமை கிடைக்கவுள்ளது. அதற்கான அமைச்சை உருவாக்கி, தனி வீடுகள், காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் பொறுப்பை அமைச்சர் திகாம்பரத்திடம் ஒப்படைத்துள்ளோம். அதற்கமைய திகாம்பரம் புதிய கிராமங்களை அமைத்து வருகிறார்.

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திருந்த வேளையில், மலையகத்துக்கான விஜயத்தின் போது 10 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்க உறுதியளித்துள்ளார். எனவே, 15 ஆயிரம் வீடுகள் அமையவுள்ளன. அவற்றுக்கான உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. சீமெந்து வீடுகள், தார் வீதிகள் மற்றும் கல்வி வசதிகளும் கிடைக்கவுள்ளன.

“நாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குறைகூறி விமர்சித்து வந்துள்ளோம். மக்களுக்கு செய்ய வேண்டியதைச் செய்யவில்லை. அதற்கான ஆதங்கமே தவிர, நான் யாரையும் ஏசவில்லை. எம்மிடம் திட்டமும் இருக்கின்றது. நிதியும் இருக்கின்றது. 20120 வரை ஆட்சி நடத்த முடியும்” என, அவர் மேலும் கூறினார்.  
Previous Post Next Post