(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இலங்கையிலுள்ள மூத்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் 2017 மௌலவி பட்டமளிப்பு விழா (14) ஞாயிற்றுக்கிழமை ஜாமிஆவின் ஊர் வீதி கட்டிடத் தொகுதியிலுள்ள 'ஷைகுல் பலாஹ்' மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் இயக்குனர் சபை உப தலைவரும்,உப அதிபருமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக்கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.அஷ்றப் (ஷர்க்கி) சிறப்புரை நிகழ்த்தினார்.
இதன் போது அதிதிகளினால் ஜாமிஆவில் 2017ம் ஆண்டு நடைபெற்ற மௌலவி பரீட்சையில் சித்தியடைந்த 12 மௌலவிகளுக்கு மௌலவி பட்டத்திற்கான சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு மௌலவி பட்டம் பெற்று வெளியாகிய மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் தமிழ் மற்றும் அறபுப் பேச்சுக்கள்,ஹஸீதாக்ள் என்பன இடம்பெற்றது.
ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் அலுவலகப் பொறுப்பாளர் மௌலவி எம்.பீ.எம்.பாஹிம் (பலாஹி)யின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.முகம்மது றஹ்மத்துல்லாஹ் ஆலிம் (பலாஹி),ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் இயக்குனர் சபை செயலாளர் கவிமணி. எம்.எச்.எம்.புகாரி (பலாஹி),கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் (பலாஹி), அஷ்ஷெய்க் எம்.ஐ.அப்துல் கபூர் (மதனி) உட்பட விரிவுரையாளர்கள்,இயக்குனர் சபை உறுப்பினர்கள், மாணவர்கள்,உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
1955ஆம் ஆண்டு தொடங்கப் பெற்ற இக்கல்லூரி சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சமயத்துறையில் சிறப்பாக பணியாற்றி வருவதுடன் இதுவரையில் 421 மௌலவிமார்களையும்,390 ஹாபிழ்களையும் உருவாக்கியுள்ளது.
1959ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் அறுபது ஆண்டு காலம் இங்கு அதிபராக பெரும்பணி செய்த தென்னிந்தியாவின் அதிராம் பட்டினத்தை பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹூம் அல்லாமா மௌலானா முகம்மது அப்துல்லாஹ் ஆலிம் றஹ்மானி அவர்கள் கடந்த 13.10.2016 இல் காலமானார்கள். அன்னாரின் மறைவின் பின் அவரது புதல்வர் அஷ்ஷெய்க் எம்.ஏ.முகம்மது றஹ்மத்துல்லாஹ் ஆலிம் (பலாஹி) இக்கல்லூரியின் அதிபராக இற்றைவரை செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.