லிபியாவின் முக்கிய நகரங்களில் ஒன்று பெங்காசி. இந்த நகரின் மத்திய பகுதியில் அமைந்து உள்ள அல்-சல்மானி என்கிற இடத்தில் பிரசித்தி பெற்ற மசூதி ஒன்று உள்ளது.
நேற்று முன்தினம் மாலை, ஏராளமானவர்கள் இந்த மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது மசூதிக்கு வெளியே பயங்கரவாதிகள் நிறுத்தி வைத்திருந்த காரில் இருந்த வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு கரும் புகை மண்டலம் உருவானது. அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாகின.
குண்டுவெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்சுகளும் வரவழைக்கப்பட்டன.
முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்த ½ மணி நேரத்திற்கு பிறகு, மசூதி அமைந்து உள்ள தெருவின் நுழைவு பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றொரு காரில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின.
இதில், அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராணுவ வீரர்கள் அப்பாவி பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர்.
அடுத்தடுத்து நடந்த இரட்டை கார் குண்டுவெடிப்பில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தோர் எண்ணிக்கை 22 பேர் பலியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 87 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.