இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஆரம்பித்தார். எனினும் தற்போது அவர் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான குழுவினர் சுமத்தி வருகின்றனர்.
இதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலின் ஊடாக மூன்றாவது தடவையாக மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து அவருக்கு பதிலளிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒத்துழைப்பு வழங்கினார். இதன்பிரகாரமே அவர் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை மத்திய வங்கி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டு எழுந்த போது அதனை உரிய முறையில் விசாரணை செய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிட்டிபன தலைமையிலான குழுவொன்றை அமைத்தார். அந்த குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு பாராளுமன்றத்தில் விவாதமொன்றையும் பெற்றுக்கொடுத்தார்.
அதன்பின்னர் பொதுத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் தனக்கு சாதகமான ஒருவரை நியமிக்காமல் கோப்குழுவிற்கு மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியை தலைவராக நியமித்து இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஒழுங்கு முறையுடன் நடந்து கொண்டார்.
கோப் குழுவின் அறக்கை கிடைக்க பெற்ற பின்னர் அதனை உடனடியாக சட்டமா அதிபருக்கு அனுப்பி மோசடிக்காரர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் முன்னின்று செயற்பட்டார். இந்த மோசடி தொடர்பில் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்தும் தண்டனை குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.
அதன்பின்னர் குறித்த மோசடி தொடர்பாக மேலும் விசாரணை செய்வதற்கு வழங்கி ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பூரண ஒத்துழைப்புகளையும் வழங்கினார். இதன்பிரகாரமே குறித்து ஆணைக்குழு முன் சென்று சாட்சியமளித்தார். இதன் ஊடாக தான் ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும கூடிய அரசியல்வாதி என்பதனை மீண்டும் நாட்டுக்கு நிரூபித்தார்.
தற்போது ஒரு சில அரசியல்வாதிகள் இந்த மோசடியை மையமாக வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது அதுவே அவர்களுக்கு பாரமாகியுள்ளது.
இந்த மோசடியை அடிப்படையாக கொண்டு மக்களின் கவனத்தை கூட்டு எதிர்க்கட்சியினர் திசைத்திருப்ப பார்கின்றனர். இதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மூன்றாவது தடவையாக மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து அவருக்கு பதிலளிப்போம்.