பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் ஐந்து கோடி ரூபா பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுக்கள் சட்டவிரோதமான கடத்திய இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று (17) அதிகாலை மாதகல் பகுதியில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கடத்திய நிலையில் குறித்த தங்கபிஸ்கட்டுக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஐந்து கோடி என யாழ். பிராந்திய கடற்படையின் உதவிப்பணிப்பாளர் ஆர். ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுக்கள் அனைத்தும் யாழ் தெல்லிப்பழை பகுதியில் உள்ள இலங்கை சுங்கத்திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன்தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான இருவரும் யாழ். மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் அதிகாலை வேளையில் ரோந்து சேவையில் ஈடுபட்ட கடற்படையினர் சந்தேகத்திற்கிடமாக பயணம் செய்த குறித்த படகை சோதனை செய்துள்ளனர்.
இதன் போது படகில் இருந்தவர்கள் முரண்பாடான தகவல்களை தெரிவித்த நிலையில் அவர்கள் பயணம் செய்த படகை சோதனை செய்யப்பட்டு குறித்த கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.