ஐரோப்பாவின் தென்பிராந்தியத்தைச் சூழ்ந்திருக்கும் ‘எலீனர்’ குளிர்காலப் புயல் மூன்று பேரின் உயிரைக் காவு வாங்கியிருப்பதுடன் கடும் சேதங்களையும் விளைவித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புயலால் கட்டமைப்புக்கள் பலவும் சேதமடைந்திருப்பதால், பல்லாயிரக்கணக்கானோர் மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர். விமானச் சேவைகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.
ஸ்பெயினின் வட கரையோரப் பகுதியில் எழுந்த இராட்சத அலையில் சிக்கி இருவர் பலியானதோடு, பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட ஒருவர் கடுங்காற்றால் தூக்கி வீசப்பட்டு மரத்தில் மோதி உயிரிழந்தார்.
இப்புயலால், டச்சு வரலாற்றிலேயே முதன்முறையாக அந்நாட்டின் ஐந்து கடல் தடுப்புப் பொறிகளும் இயக்கப்பட்டுள்ளன. ஆம்ஸ்டர்டேமில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாகவும் பதிவாகியுள்ளது.