Top News

சிங்கள வாக்குகளுக்காக காத்தான்குடியில் கூட்டம் நடத்திய மஹிந்த



மஹிந்த ராஜபக்ஷ காத்தன்குடியில் கூட்டம் நடத்துவது முஸ்லிம்களின் வாக்குகளுக்காக அல்ல. மதில் மேல் பூனையாக இருக்கின்ற சில சிங்கள வாக்காளர்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சத்தில், முஸ்லிம்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடியில் கூட்டம் நடத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
குருணாகல் பன்னல பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சனிக்கிழமை (27) மாலை பன்னலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

மஹிந்த ராஜபக்ஷ காத்தன்குடியில் கூட்டம் நடத்துவது முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக அல்ல. முஸ்லிம்களின் ஆதரவு தனக்கில்லை என்றதொரு சூழலில், தனக்கு ஆதரவு இருப்பதை காட்டவேண்டும் என்பதற்காக இப்படி பாரிய கூட்டத்தை காத்தன்குடியில் நடத்தியிருக்கிறார். காத்தான்குடியில் மஹிந்த கூட்டம் நடத்தினாலும் சரி, பொது பல சேனா கூட்டம் நடத்தினாலும் சரி மக்கள் வருவார்கள்.

கூட்டங்களில் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்பதற்காக வருபவர்களை, மஹிந்தவின் ஆதரவாளர்களாக கருதமுடியாது. மஹிந்த ராஜபக்ஷ வந்திருக்கிறார், அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை கேட்பதற்காக ஒரு பெரிய கூட்டம் வரும். அங்கு கூட்டம் கூடியதற்காக காத்தான்குடியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்கு இருக்கின்றது என்று யாரும் கருதமுடியாது.

முஸ்லிம்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இல்லையென்றும், இதனால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்றும் நம்பிக்கொண்டிருக்கும் சிங்கள மக்களை திசைதிருப்புவதற்காவே காத்தான்குடி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மதில் மேல் பூனையாக இருக்கின்ற சில சிங்கள வாக்காளர்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சத்தில், முஸ்லிம்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், காத்தன்குடியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்கு சேகரிக்கலாம் என்று யாரும் கனவில் கூட நினைக்க முடியாது.

கடந்த ஆட்சிக்காலத்தில் அனுபவித்த அட்டூழியங்கள் மற்றும் அட்டகாசங்களுக்கு மத்தியில், இந்த தேர்தலை பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷ அணியினர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்ற ஒரு எண்ணப்பாட்டில் இருக்கின்றனர். எமது ஆட்சிக்காலத்தின் நடுப்பகுதியில் வந்திருக்கின்ற இத்தேர்தலில் எப்படியாவது உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றி தமது பலத்தை நிரூபிப்பதற்கு மொட்டு அணியினர் தீவிரமாக முயற்‌சித்துக்கொண்டிருக்கின்றனர்.

தேசிய கட்சிகள் நினைத்தபடி வட்டார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு சாவுமணி அடித்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால், சிறுபான்மை சமூகங்கள் சரியான அணுகுமுறையோடு, திட்டமிட்டு செயற்பட்டால் எமக்கு பாரிய நன்மைகள் கிடைக்கும் என்பதை பெரிய கட்சிகள் இந்த தேர்தல் முடிவுகளில் உணர்ந்துகொள்ளும்.

புதிய கலப்புத் தேர்தல் முறை ஆரம்பத்தில் பெரிய கட்சிகளுக்கெல்லாம் வாய்ப்பாகத்தான் இருக்கப்போகின்றது. சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளுக்கு சவாலாக அமைந்துவிடும் என்ற அச்சத்தோடு கடந்த 3 வருடங்களாக இந்த தேர்தல் முறையில் பல மாற்றங்களைச் செய்யவேண்டும் என்ற போராட்டங்களை நடத்திவந்தோம்.

அவ்வாறு நடைபெற்ற மாற்றங்களில் பூரண திருப்தியில்லாத நிலையில், முன்பிருந்த தேர்தல் முறையை விடவும் புதிய தேர்தல் முறையில் எங்களுக்கு ஆசனங்கள் குறைந்துவிடும் என்‌ற அச்சத்திலேயே நாங்கள் இருந்தோம். ஆனால், குருணாகல் மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களுக்கும் சென்றுவந்த பின்னர்தான் நாங்கள் அச்சப்படத் தேவையில்லை, பெரிய கட்சிகள்தான் அச்சப்பட வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆட்சி மாற்றத்துக்கான அரைகூவலை அவ்வப்போது செய்யக்கூடிய அந்தஸ்தில் எமது கட்சி இருந்துகொண்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பங்களில் நாங்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, நாட்டை பாதித்த விடயங்களிலிருந்து விடுவிக்கக்கூடிய முறையில் எங்களுடைய அணுகுமுறைகள் அமைந்திருந்தன.

முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அடையாளர் பெற்‌றவர்கள் அதற்கு எதிராக, சொந்தமாக கட்சி அமைத்து இந்த இயக்கத்தை அழிப்பதற்கு புறப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், வன்னி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் வலிமையடைந்திருக்கிறது என்பது அவர்களுக்கு வருத்தமான செய்தியாக இருக்கிறது என்றார்.
Previous Post Next Post