அவர்களின் வீட்டைக் கண்டுபிடித்து கதவைத்தட்ட மாலை ஆறு மணியை நெருங்கியது.
"ஓம் வாரன்..." என்று சொன்னவாறே சுமார் நாற்பது வயதை தாண்டிய ஒரு பெண் வந்து கதவினைத் திறந்தார். முகத்தில் ஆயிரம் கேள்விக் கணைகளோடு எங்களை நோக்கிப் பார்த்தவரிடம் "தண்ணி காசு கட்டலையாம் எண்டு சொன்னாங்க, என்ன நடந்த?" என்று கேட்டோம்.
"ஓம் தம்பி, நாங்க இவடத்த வந்து இருபது வருசமா பெய்த்து, எங்களுக்கு இன்னமும் இந்த அரசாங்கம் சமுர்த்தி தெரல்ல. அப்ப சகாத் நிதியத்தாலதான் தண்ணி எடுத்து தந்தாங்க. நானும் பாத்தன் காசி கட்டத்தேவல்லயாக்கும் எண்டு, அது அப்பிடி இல்லையாம் சகாத் நிதியத்தால பிரீயா எடுத்து தாரல்லயாம், மொத்தமா கட்டுற காச கட்டாம பில்லோட சேத்து கொஞ்சம் கொஞ்சமா கட்டுறாம் எண்டுப்பொட்டு பில் வருது...
எனக்கி மாப்புள இல்லாம போயி பத்து வருசம், தொழிலும் இல்ல வருமானமும் இல்ல, அப்ப மூனு பிள்ளையல வெச்சிக்கி கடுமயா கஷ்டப்பட்டன், ஏலாம ஒம்பது மாசம் வெளிநாடு போன. அதுவும் சரியா வெரல்ல, ஊட்ட பொம்புள புள்ள இரிக்கி, பாதுகாப்பு இல்ல எண்டுப்பொட்டு ஒம்பது மாசத்தால வந்துட்டன். வந்தா இஞ்ச தண்ணி பில் கட்டாம ஒம்பதாயிரம் கெடக்கு...
மூத்த பொம்புள புள்ள மத்த ரெண்டும் சின்ன சின்ன ஆம்புள புள்ளயல், மூத்த புள்ளக்கி ஒரு மாப்புள பாத்து கலியாணம் பன்னி குடுத்த. ஒரு புள்ள பொறந்த ஒடனே அவனும் உட்டுப்பொட்டு பெய்த்தான். அப்ப மகளும் ஒண்டும் செய்ய வழி இல்லாம கடை ஒண்டுல வேல செஞ்ச. இப்ப கொழும்புல ஒரு உடுப்பு கடையில வேல செஞ்சி காசி அனுப்புறா, அவட புள்ளயயும் சேர்த்து நான்தான் கவனிக்கன்...
வேற எந்த வருமானமும் இல்ல. நானும் ஆக்கள்ள ஊட்ட வேல செஞ்சி குடுத்துப்பொட்டு வாற காசிலதான் எண்ட புள்ளயலுக்கு சோறாக்கி குடுக்குற. இப்ப என்னயும் பெரிசா ஒத்தரும் வேலக்கி கூப்புடுற இல்ல. ஒங்களுக்கிட்ட என்னத்துக்கு மன பொய் சொல்ல, பகல் சோறு இப்பான் ஆக்கி இரிக்கன், என்ட ரெண்டு புள்ளயலும் இன்னம் சோறும் திங்கல்ல மகன்...
எண்ட மகள் கொழும்புல இருந்து அனுப்புற காசிலதான் இந்தப் புள்ளயலுக்கு படிப்பு உடுப்பு சாப்பாடு எண்டு எல்லாம் செய்ற. ஆனா அது பத்து நாளக்கிம் காணா மன. எத்துன நாளக்கி ஆக்களுக்கிட்ட கேக்குற எண்டுப்பொட்டு ஊட்டுக்குள்ளேயே இரிக்கன் மனெ. எண்ட புள்ளயலுக்கு செல நாளையில சாப்புட ஒண்டுமே இரிக்காது, வெறும் பிளேண்டி ஊத்தி குடுத்துப்பொட்டு படுக்குற. நடுச்சாமம் ரெண்டு மணிக்கு ஒழும்பி கொழறுவானுகள் மனெ!
இவியலுக்கு இன்னம் ஸ்கூலுக்கு தைக்க குடுத்த உடுப்பும் வாங்கள, அதுல ஒரு புள்ள ஹிப்ழு மத்ரசாவுல ஓதுற, அதுக்கும் மாத்தய காசி கட்டல எண்டுப்பொட்டு ரெண்டு நாளா போகயும் இல்ல மனெ"
............
இன்று இந்த சம்பவம் கண்ணீரை வர வைத்தது. ஒன்றல்ல இரண்டல்ல இன்னும் எத்தனை எத்தனையோ குடும்பங்கள் இப்படி இருக்கின்றன எம் மண்ணில். இரவில் கண்ணீரை நாக்கினால் சுவைத்துக்கொண்டே கண்ணுறங்கும் குழந்தைகளும் எம் மண்ணில் உள்ளனதான்.
சுயவிசாரணை செய்துகொள்வோம் எங்கள் சொத்துக்களிலும், உழைப்புக்களிலும், உணவிலும் ஏழைகளின் பங்கு கலந்திருக்கின்றதா என்று.
பக்கத்து வீட்டில் அவர்களின் குழந்தைகள் பசித்திருந்த இரவுகளுக்காக நாம் எல்லோரும் கேள்வி கேட்கப்படுவோம்.
அஷ்ரப் அஹமத்