ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு அரசியல்வாதி அல்ல, அவர் மிகச்சிறந்த இராஜதந்திரியாவார். அவரின் இராஜதந்திர நகர்வுகளின் மூலமாகவே நாடு சரியான திசையில் பயணித்து செல்கின்றது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜனாதிபதியின் மூலமாகவே நாட்டின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்;
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் நகர்வுகள் மற்றும் தீர்மானங்கள் திட்டங்கள் அனைத்துமே மிகவும் தெளிவான அதே நிலையில் ஊழல் அல்லாத வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய வங்கி ஊழல் விவகாரமாக இருந்தாலும் சரி அல்லது நாட்டின் அபிவிருத்தி திட்டங்களிலும் ஜனாதிபதியின் செயற்பாடுகளே சிறந்ததாக அமைகின்றன.
என்னைப் பொறுத்தவரையில் ஜனாதிபதியை ஒரு அரசியல்வாதியாக நானா கருத வில்லை. அவரை ஒரு இராஜதந்திரியாகவே நான் கருதுகின்றேன். அவர் சர்வதேச நாடுகளுடன் கொண்டுள்ள நட்புறவு, காரியங்களை வெற்றிகொள்ளும் சாணக்கியத்தனம் ஆகியனவே நாட்டினை சகல தன்மைகளையும் தக்கவைத்து வருகின்றன.
ஜனாதிபதி தனது பதவிக்காலம் குறித்து வினவியதை சிலர் தவறான வகையில் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இதற்கு முன்னர் நீதிமன்றம் மீது இருந்த அழுத்தம், கட்டுப்பாடுகள், சுயாதீன செயற்பாடுகளில் இருந்த தடைகள் எவையும் இன்று இல்லை. ஜனாதிபதி தனது சந்தேகத்தை வினவினார், அத்துடன் ஒதுங்கிக்கொண்டார். மாறாக தான் ஒருபோதும் நீதிமன்ற சுயாதீனத்தில் தலையிடவில்லை.
ஆகவே இதனை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.