கட்சிக்கெதிராக செயற்படுபவர்களை மீண்டும் இணைக்க மாட்டோம்

NEWS


கல்முனை மாநகர சபையில் எமக்கெதிராக மான், ஹெலிக்கொப்டர் போன்ற சின்னங்களில் சிலர் இறங்கியுள்ளனர் என நகரத் திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இவர்களில் சிலர் கட்சியிலிருந்து சென்றவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். மருதமுனைக்கான முதலாவது அரசியல் நடவடிக்கைக் காரியாலயம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

தேர்தலில் வென்று விட்டு மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணையலாம் என்று எண்ணுகின்றனர். தலைமை இதில் தெளிவாக இருக்கின்றது.
எமக்கு எதிராகத் திட்டம் தீட்டுபவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் யானையிடம் சரணாகதி அடைந்துள்ளது. மரத்தில் கேட்கவில்லை என்றெல்லாம் சிலர் விமர்சிக்கின்றனர்.

இது அரசியல் வேக்காடு பிடித்தவர்களின் செயலாகும். தேர்தலில் சேர்ந்தும் தனித்தும் கேட்பதென்பது சகஜமான விடயமாகும். இதன் மூலம் நமது அபிலாசைகளை அடைந்து கொள்ள முடியும்.

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் பொதுநிறுவனங்கள் மற்றும் தேவைகளுக்காக காணிகளைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடியான சூழல் நிலவுகிறது.

இதனை நிவர்த்திக்கும் நோக்கில் மேட்டுவட்டை - கரவாகு பகுதியில் முதற்கட்டமாக 800 ஏக்கரை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளது.
அரசாங்கத்தின் ஒத்தாசையில் இவற்றையெல்லாம் செய்துவரும் போது கல்முனை மாநகர ஆட்சியினையும் நாம் கைப்பற்ற வேண்டிய தேவையுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் பிரதேசங்களில் அரசியல் குழப்பங்களை உண்டு பண்ண எத்தனிப்பவர்களின் பகுதிகளுக்கும் நாங்களும் சென்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
6/grid1/Political
To Top