( எம்.என்.எம் அப்ராஸ்)
அண்மையில் வெளியாகிய க.பொ.த. உயர்தர பரீட்சை(2017) முடிவில் விஞ்ஞானப் பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தையும், தேசியளவில் 13ம் இடத்தையும் பெற்று சாதனை புரிந்து கல்முனை மண்ணை பெருமிதம் கொள்ளச் செய்த செல்வன் எம்.ஏ.ஆர். முஹம்மது அஹ்சன் அவர்களையும்,கடந்த(2017)தரம் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்திலும் முதலிடம் பெற்று சாதனை புரிந்து கல்முனைக்கு பெருமை ஈட்டித்தந்த செல்வி எம்.ஜெ அமாரா ஷஹ்லா அவர்களையும் கெளரவித்து பாராட்டும் நிகழ்வு ஒன்றினை கல்முனையன்ஸ் போரம் ஏற்பாடு செய்திருந்தது.
கல்முனையன்ஸ் போரத்தின் செயற்பாட்டாளர் பொறியியலாளர் ஜெளஸி அப்துல் ஜப்பார் அவர்களின் தலைமையில் கடந்த 03-01-2018கடந்த புதன் கிழமை போரத்தின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இக்கெளரவிப்பு நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள், போரத்தின் அங்கத்தவர்கள் என பலர் கலந்துசிறப்பித்தனர்.
இதன் போது சாதனை புரிந்த மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும், பரிசில்களும், கல்முனை மண் சார்பான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.