மோசடிக்காரர்கள் அனைவரும் தற்போது கூட்டிணைந்துள்ளனர். எனவே நான் பெரிய வீரர்களுக்கு சவால் ஒன்றை விடுக்கின்றேன். முடியுமானால் தேர்தலுக்கு முன்னர் இரண்டு ஜனாதிபதி அறிக்கை கள் தொடர்பாகவும் விவாதம் செய்து காண்பியுங்கள். அப்போது யார் மனிதர்கள் என்பது நன்றாக விளங்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்தார்.
அத்துடன் தற்போது பிரதான கட்சிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள கட்சிகளின் தலைவர்களை என்னுடன் ஊழல் மோசடி தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு அழைகின்றேன். இதன்போது யார் மோசடிக்கார்கள் என்பதனை நாட்டுக்கு நான் தெளிவுப்படுத்துவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று பாணந்துறையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடந்த போது முன்னாள் ஜனாதிபதியும் எனது நண்பருமான மஹிந்த ராஜபக்ஷ வாக்களிக்கவில்லை என நான் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் ஜனாதிபதி பதிலளித்திருந்தார்.
ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்புக்கு எடுக்கவில்லை என மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். அது முற்றிலும் தவறாகும். ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடந்த போது மஹிந்த ராஜபக்ஷ வாக்களிக்கவில்லை. இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஹன்சாட் அறிக்கையை மையமாக வைத்தே நான் இதனை கூறினேன். நான் குறித்த ஹன்சாட் அறிக்கையையும் கொண்டு வந்தேன்.
அத்துடன் நேற்று முன் தினம் பாராளுமன்றத்தில் ஆச்சரியமான சம்பவம் நடந்தது. அதாவது மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை தேர்தலின் பின்னர் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வோம் என கட்சி தலைவர்கள் பாராளுமன்றத்தில் தீர்மானம் எடுத்துள்ளனர்.
இதன்மூலம் மோசடிக்கார பிரபுக்கள் அனைவரும் தற்போது கூட்டிணைந்துள்ளனர். தேர்தலுக்கு முன்னர் இதனை விவாதத்திற்கு எடுத்திருந்தால் இரு தரப்பினரின் ஆடைகளும் விலகிப் போயிருக்கும். அதனால்தான் விவாதத்திற்கு எடுக்கவில்லை.
அத்துடன் பாராளுமன்றத்தில் கூடுவதற்கு முன்னர் மோசடிக்கார பிரபுக்கள் அனைவரும் பொரளையில் ஒன்று கூடியுள்ளனர். இந்த மோசடிக்கார பிரபுக்கள் அனைவரும் ஒரு குழுவினர்கள் தான். கூட்டிணைந்து தேர்தலுக்கு முன்னர் இந்த இரு அறிக்கைகளை விவாதத்திற்கு எடுத்தால் சிக்காலாகும் என்று கருதி தேர்தலுக்கு பின்னர் விவாதத்திற்கு எடுப்போம் என தீர்மானித்தனர்.
நான் பெரிய வீரர்களுக்கு சவால் விடுகின்றேன்.முடியுமானால் பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் இந்த இரு அறிக்கைகளையும் ஒருநாளில் விவாதம் செய்து காண்பியுங்கள். அப்போது யார் மனிதர்கள் என்பது நன்றாக விளங்கும். தற்போது பிரதான கட்சிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள கட்சிகளின் தலைவர்களை என்னுடன் ஊழல் மோசடி தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு அழைகின்றேன். இதன்போது யார் மோசடிக்கார்கள் என்பதனை நாட்டு தெளிவுப்படுத்துவேன் என்றார்.