இஸ்லாமிய ஆண் ஒருவருடன் நட்பு கொண்டிருந்ததால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்த இந்து மதத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கர்நாடாக மாநில காவல் துறையினர் கூறியுள்ளனர்.
அந்த 20 வயதாகும் பெண், தனது நண்பர் ஒருவரிடம் ‘நான் இஸ்லாமியர்களை நேசிக்கிறேன்’ என்று வாட்சப்பில் கூறியதைத் தொடர்ந்து, ஒரு இஸ்லாமிய நபருடனான நட்பு குறித்து அவர் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வந்தார்.அவரது அந்த வாட்சப் உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.
அந்த இஸ்லாமிய ஆணுடன் நட்பு கொண்டிருப்பதை தவிர்க்குமாறு அவரது பெற்றோரை மிரட்ட, இந்து கடும்போக்குவாத அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கடந்த சனிக்கிழமையன்று அவரது வீட்டுக்குச் சென்றனர். அன்றைய தினமே அவர் தற்கொலை செய்துகொண்டார்.
முதலில் அவரது மரணம் குறித்து தற்கொலை வழக்கு பதிவு செய்திருந்த காவல்துறையினருக்கு, விசாரணைக்குப் பிறகே அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதில் சமூக வலைத்தளங்களுக்கு உள்ள பங்கு, திங்களன்று, தெரிய வந்தது.
வேறு ஒரு மதத்தை சேர்த்த நபருடன் தான் எடுத்துள்ள படம் பகிரப்படுவதாகவும், தனது நடத்தை குறித்து அவதூறு பரப்பப்படுவதாகவும், அப்பெண் தனது தற்கொலைக் குறிப்பில் எழுதியுள்ளதாக பிபிசியிடம் சிக்மங்களூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
“தான் ஒரு இஸ்லாமிய ஆணுடன் காதல் கொண்டிருப்பதாக ஐந்து ஆண்கள் தனது தாயிடம் சென்று புகார் கூறியதால் தற்கொலை செய்து கொண்டதாக அவர் அந்தக் குறிப்பில் கூறியுள்ளார்,” என்றும் அவர் தெரிவித்தார்.
அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற நால்வரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பிபிசியின் இம்ரான் குரேஷிக்கு கிடைத்துள்ள அந்த ஸ்க்ரீன்ஷாட்களில் வேறு மதத்தை சேர்ந்த ஒருவருடன் எந்தத் தொடர்பும் கொள்ள வேண்டாம் என்று அப்பெண்ணின் நண்பர் அவரிடம் கூறியுள்ளார். அதற்கு அப்பெண், “ஆனால், நான் இஸ்லாமியர்களை நேசிக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.
வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் நட்பு கொள்வதை தான் தவறாக நினைக்கவில்லை என்றும் அப்பெண் கூறியுள்ளார். ஃபேஸ்புக், வாட்சப் என எந்த சமூகவலைத்தளத்திலும், அப்பெண்ணை விமர்சனம் செய்த யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
“இதுவும் ஒரு வகையான அச்சுறுத்தல்தான் என்று நம்புகிறோம். அதனால் ஒரு இளம் உயிர் பறிபோயுள்ளது. இந்த வழக்கை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். ஏனெனில், இதில் அப்பெண்ணின் தவறு எதுவும் இல்லை,” என்றும் அவர் கூறியுள்ளார்.