எம்.ஐ.சர்ஜுன், கிழக்குப் பல்கலைக்கழகம்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 'மெச்சத்தக்க சேவை விருது வழங்கும் விழா' வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைகழக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வு. ஜயசிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்வு, பிரதி துணைவேந்தர் டாக்டர் மு.நு.கருணாகரன், பதில் பதிவாளர் யு.பகிரதன் உட்பட பீடாதிபதிகள், துறைத் தலைர்கள், திணைக்களத் தலைவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் மிக விமர்சையாக இடம்பெற்றது.
மேற்படி மெச்சத்ததக்க சேவை விருது வழங்கும் விழாவின்போது 35 வருடங்கள் சேவையாற்றிய 04 பேர், 30 வருடங்கள் சேவையாற்றிய 03 பேர், 25 வருடங்கள் சேவையாற்றிய 10 பேர் அடங்கலாக மொத்தம் 17 கல்விசார், கல்விசாரா மற்றும் நிருவாக உத்தியோகத்தர்களுக்கு நினைவுச் சின்னம், சான்றிதழ் என்பன வழங்கி கௌரவிக்கப்படதுடன் இறையடி எய்திய ஊழியர்களுக்கான விருதுகளை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கிழக்குப் பல்கலைக்கழக தாபனங்கள் பகுதி வருடாவருடம் முன்னெடுக்கும் இவ்விருது வழங்கும் விழா வருடத்தின் முதலாவது வேலைநாளில் மிக கோலாகலமாக நடாத்தப்பட்டு வருகின்றமை இவ்விழாவின் சிறப்பம்சமாகும்.