Top News

ஹக்கீமுக்கு பாடம் புகட்ட வேண்டும்! - .ஹிஸ்புல்லாஹ்

DSC_0142

முஸ்லிம்களின் உரிமைகளை இல்லாமல் செய்கின்ற முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையக் கூடிய சட்டத்திருத்தங்களை மேற்கொள்கின்ற போது அதற்கு எதிர்ப்பினை வெளிக்காட்டாது ஒத்துழைப்பு வழங்குகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு இம்முறைத் தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவர் சார்ந்த காத்தான்குடி முன்னாள் நகர சபைக்கும் எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியன 20 பாரதூரமான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள நிலையில், அக்குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என ஆதாரபூர்வமாக நிரூபிப்பதற்காக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி பஸ்மலா சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ஊழல்’ மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு பாதிப்பான பல்வேறு சட்டவரைபுகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன. கிழக்கு முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் இதற்கு ஆதரவான கருத்துக்களையே முன்வைத்து வருகின்றார்.

வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் வழங்கியுள்ள செவ்வியொன்றில் “வடக்கும் கிழக்கும் இணைந்தால் மாத்திரமே தமிழர்களின் அபிலாஷைகளை வெல்ல முடியும் என்ற நிலைப்பாடும் – கோரிக்கையும் இருக்குமாக இருந்தால் முஸ்லிம் மக்கள் ஒருபோதும் தடையாக இருந்துவிடக் கூடாது” என கூறியுள்ளார்.

இதே போன்று அண்மையில் கல்முனையில் தமிழ் பிரதிநிதிகளைச் சந்தித்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் “வடக்கும் கிழக்கும் இணைவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இடையூறாக இருக்காது” என குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தை பொது மேடைகளில் பகிரங்கமாக தெரிவித்தும் வருகின்றார்.

ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிறுபான்மை சமூகத்துக்கு பாதிப்பான எந்தவித சட்டவரைபுக்கும் ஆதரவளிக்காது என குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதத்தில் வடக்கும் கிழக்கும் இணைவதற்கு ஒருபோதும் ஆதரவளிக்காது என திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவையில் அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் எமது கட்சியின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும், கட்சிப் பிரதித் தலைவரும், சிரேஷ்ட அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா எமது கட்சியின் நிலைப்பாட்டை தெட்டத்தெளிவாக விளக்கியிருந்தார்.

அதில், வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பான சட்டவரைபுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காது என தெளிவாக அறிவித்திருந்தார்.

இதனடிப்படையில், மு.காவுக்கு வழங்குகின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு வழங்குகின்ற வாக்குகளாகும் என நான் குறிப்பிட்ட கருத்துக்கு எதிராக ஷிப்லி பாறூக் மற்றும் மு.கா. கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் ஆகியோர் என்னை விமர்சித்து வருகின்றனர். எனது கருத்து நியாயமானதே. அதில் எந்தவித மாற்றமுமில்லை.

இது போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும், எனது ஆதரவாளர்கள் மீதும் சுமத்தியுள்ள 20 குற்றச்சாட்டுக்களுக்குமான பதிலை ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளேன். அதற்கு பதில் அளிக்க அவர்களுக்கு நேரமும் வழங்கியுள்ளேன். 5ஆம் திகதிக்கு முன்னர் எனது கருத்துக்கு எதிர் கருத்தினை அவர்கள் முன்வைப்பார்களாயின் 6,7ஆம் திகதிகளில் அவற்றுக்கான பதிலை நான் மீண்டும் வழங்குவேன்.

நாங்கள் காத்தான்குடி மண்ணில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கியுள்ளோம். பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஒருவருடைய நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த முன்னர் இனி முன்னுக்கு பின் யோசித்தே அவர்கள் பேச வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த மண்ணை திட்டமிட்டு அவர்கள் தோற்கடித்தார்கள். சுமார் 20 ஆயிரம் வாக்குகளைக் கொண்ட ஏறாவூருக்கு ஒரு பிரதிநிதித்துவம், சுமார் 30 ஆயிரம் வாக்குகளைக் கொண்ட கல்குடாவுக்கு ஒரு பிரதிநிதித்துவம் 40ஆயிரத்துக்கு மேல் வாக்குகளைக் கொண்ட காத்தான்குடிக்கு எந்தவித பிரதிநிதித்துவமும் இல்லை. இந்த மண்ணின் பிரதிநிதித்துவம் திட்டமிட்டு இல்லாமல் செய்யப்பட்டது.

நான் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இந்த மண்ணில் உள்ள மக்களின் துஆக்களும், அழுகைகளும் இந்த மண்ணுக்கு தேசியப்பட்டியல் மூலம் பிரதிநிதித்துவம் கிடைத்தது. அந்த பிரதிநிதித்துவத்தை பாதுகாத்து கொள்ளாமல் அதனையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று சூழ்ச்சி செய்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள், ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பினார்கள். ஆனால், எதுவும் கைகூடவில்லை. இவ்வாறு எமது மண்ணுக்கு துரோகம் செய்ந்தவர்களை இந்தத் தேர்தலில் சரியான பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும். – என்றார்.


DSC_0056 DSC_0059 DSC_0094
Previous Post Next Post