ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்யும் பாவச் செயலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே பொறுப்பு என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடைய செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த உள்ளிட்ட தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
பசில் ராஜபக்ச ஒரு நிமிடமேனும் சிறையில் இருக்கவில்லை, சிறையில் தடுத்து வைக்கப்பட்ட போதும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுவிட்டார்.
இதற்கு நன்றி கடன் செலுத்தும் முகமாக பசில் ராஜபக்ச சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்கின்றார். சுதந்திரக் கட்சியை தோற்கடிக்கச் செய்து ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றியீட்டச் செய்யும் ஒப்பந்தம் மலர்மொட்டு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.
மகிந்த ஆட்சிக் காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள சிறிகொத்தாவிற்கு செல்லும் பாதை அவசரமாக புனரமைக்கப்பட்டது போன்று இன்று வரையிலும் இரு தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு காணப்படுகின்றது.
வேறும் கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்யும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கான சாட்சியங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன எனவும் தேர்தலின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.