கட்சி ஒழுக்க விதிகளை மீறினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் வெளியே போடுவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் துறைமுக அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரான மஹிந்த மீது மலர்மொட்டு லேபலை ஒட்டுவது பிழையானது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. மஹிந்;த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலான வழக்குகள் எப்போது முடிவடையும் என புரியவில்லை.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பது குறித்த செயன்முறை கால தாமதமடைந்துள்ளது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன இதற்கு முன்னதாக வழக்கு விசாரணைகள் பூர்த்தியாக வேண்டும். இந்த அரசாங்கத்தின் கொடுக்கல் வாங்கல்கள் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு இதற்கான சிறந்த உதாரணமாக குறிப்பிட முடியும். கட்சியில் இருந்து கொண்டு மற்றுமொரு கட்சிக்கு ஆதரவளித்தால் மஹிந்த ராஜபக்ச மட்டுமன்றி வேறும் எந்தவொரு கட்சியின் உறுப்பினர் என்றாலும் கட்சியை விட்டு நீக்குவதனைத் தவிர வேறு வழியில்லை என மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.