ஏ.ஆர்.ஏ.பரீல்
பேருவளை, அளுத்கமயில் நடைபெற்ற கலவரங்கள் தொடர்பில் ஏன் இந்த அரசாங்கம் தேடிப் பார்க்காமலிருக்கிறது? விசாரணை நடத்தாமலிருக்கிறது?
அவ்வாறு விசாரணைகள் நடத்தினால் இந்தக் கலவரத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது வெளிச்சத்துக்கு வந்துவிடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பிரசாரக்கூட்டம் கொழும்பு விகார மகாதேவி பூங்கா வெளியரங்கில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
"கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அன்று முஸ்லிம்களின் ஆதரவுடன் அதிகாரத்தில் இருந்த அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பல்வேறு சேனாக்கள் செயற்பட்டன. இன்று அவர்களைத் தேடிக்கொள்வதற்கும் முடியாதுள்ளது.
அன்று பொதுபலசேனா வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெற்றுக்கொண்டே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைளை முன்னெடுத்தது. வெளிநாடுகள் சிலவற்றிற்கும் இவ்வாறான ஒரு நடவடிக்கையே தேவையாக இருந்தது,
முஸ்லிம்கள் பல எதிர்பார்ப்புகளுடனேயே இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் | கொண்டு வந்தார்கள். ஆனால் அவரது எதிர்பார்ப்புகள் கானல் நீராகிவிட்டது.
இன்று முஸ்லிம்களின் வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாட்டை ஆள்பவர் பிரதமராகவே இருக்கிறார். இதனை ஜனாதிபதியே சொல்லியிருக்கிறார்.
ஜனாதிபதி சொல்பவைகளை பிரதமர் கேட்பதில்லை. ஜனாதிபதிப் பதவியை கொச்சைப்படுத்த முடியாது. இவ்வாறிருக்கும் நிலையில் எவ்வாறு ஆட்சி செய்ய முடியும். மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி கொண்டிருந்தபோதுகூட 4 பில்லியன் ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பாராளுமன்றத்தில் சிறுபிள்ளை போன்று நடந்து கொள்கிறார். கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நாடகமொன்று அரங்கேற்றப்பட்டது. ஜனாதிபதி கோபத்தில் வெளியேறிச் சென்றார்.
அரைமணித்தியாலத்தின் பின்பு பிரதமர் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம், ராஜித சேனாரத்ன என்போர் சென்று ஜனாதிபதியை அழைத்து வருகிறார்கள். பின்பு இரு தரப்பினரும் தாங்கள் ஏசிக் கொள்ளவில்லை என உடன்படிக்கை செய்து கொள்கிறார்கள். அமைச்சர்களே அமைச்சரவையில் இருப்பது வெட்கமாக இருக்கிறது என்று கூறிக் கொள்கிறார்கள்.
அமைச்சரவையில் அமைச்சர்கள் ஜனாதிபதியை பிரச்சினைகளுக்கு உட்படுத்துகிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சி பிணைமுறி கொள்ளையினால் துர்நாற்றம் வீசுகிறது. வெட்கம் என்று ஒன்று இருக்குமென்றால்
பிரதமர் தனது பதவியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். பிணைமுறி கள்வர்கள் அகப்பட்டுவிட்டார்கள்,
ஆனால் ஒபரேஷன் 2 ஆரம்பித்துப் பயனில்லை. இந்த கொள்ளையை மேற்கொண்டது யாரென்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். கள்வர்களுக்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்,
இந்த அரசாங்கம் நல்லிணக்கம் என்று கூறிக்கொண்டு நாட்டைத் துண்டாடுவதற்கு முயற்சிக்கிறது.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகள் போன்று நாட்டை முன்னேற்றுவதற்கு ஒன்றுபட வேண்டும். இன்று கொழும்பு நகர் அபிவிருத்தி பின்னடைவு கண்டுள்ளது. எமது காலத்தில் நாம் ஆரம்பித்த அபிவிருத்தி திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. |
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக மத்திய வங்கியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பொறுப்பில் கொண்டு வந்தார். மத்திய வங்கியின் ஆளுநராக சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த நண்பரை நியமித்தார். மத்திய வங்கியை கொள்ளையடிப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகளே இவை என்றார்.