சத்துரங்க பிரதீப்
அனைத்து விதமான பிரச்சினைகளுக்கு மத்தியில், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் வழங்கிய உதவியையும் அர்ப்பணிப்பையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறந்துவிட்டாரா எனச் சந்தேகிப்பதாக, ஐ.தே.கவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
மாணிக்கமுல்ல பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே, ஜனாதிபதியின் மீது வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்துவரும் மரிக்கார் எம்.பி, இவ்விமர்சனத்தையும் வழங்கினார்.
"அவர் ஜனாதிபதியாகுவதற்கு முன்னரே, அவரது ஜனாதிபதிப் பதவிக்கு நாம் உதவினோம்" என, அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தாங்கள் செய்தவை குறித்து, நன்றியறிதலுடன் இல்லை எனவும் அவருக்கு ஞாபகம் இல்லை எனவும் தாங்கள் நினைப்பதாகக் குறிப்பிட்டதோடு, ஜனாதிபதியின் மனச்சாட்சியிலிருந்து அந்த நன்றியறிதலைத் தேட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
அத்தோடு, அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவும், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு உதவியவர்கள் போன்று கதைக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
"தேர்தலில் ஜனாதிபதி சிறிசேனவுக்கு, எம்மைத் தவிர யாரும் உதவவில்லை. அவர்களுடைய வாலில் நாங்கள் தொற்றிக் கொண்டது போல அவர்கள் கதைக்கின்றனர். எங்களுடைய சாரங்களில்தொங்கிப் பிடித்தபடி நல்லாட்சி அரசாங்கத்துக்குள் தாங்கள் எப்படி வந்தார்கள் என்பதை, அமைச்சர்களான டிலான் பெரேராவும் சுசில் பிரமஜயந்தவும் மறந்துவிட்டார்கள். இந்த அரசாங்கத்தை அதிகாரத்துக் கொண்டுவந்தவர்கள் நாங்கள் தான்" என்று, மரிக்கார் எம்.பி குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கம் எவ்வாறு ஆட்சிக்கு வந்தது என்பதை மறந்தோருக்கு, பெப்ரவரி 10ஆம் திகதி (உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்), ஐக்கிய தேசியக் கட்சியினர் பாடம் புகட்டுவார்கள் எனக் குறிப்பிட்டார்.
"அமைச்சர் டிலான் பெரேரா வெளியிடும் அறிக்கைகளைப் பார்த்து, எமது பிரிவினர், வாயடைத்துப் போய் நிற்கின்றனர். நாங்கள் வாயடைத்துப் போய் நிற்கத் தேவையில்லை. இராஜாங்க அமைச்சர் செய்வது போல, நாமும் பதிலடி வழங்க வேண்டும்" என, அவர் மேலும் குறிப்பிட்டார்.