மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த விசாரணை அறிக்கையில் மாற்றங்கள் செய்யப்படுவதாக இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் குற்றவாளிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்கின்றார் எனவும் தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. அறிக்கை பாராளுமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்னரே ரவி கருணாநாயக்கவுக்கும், அர்ஜுன மகேந்திரனுக்கும் வழங்கப்பட்டுள்ளது எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியது.
தேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கட்சியின் இணைத்தலைவர் ஜயந்த சமரவீர எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை குறித்து நாட்டில் பாரிய சர்ச்சை எழுந்துள்ளது. எனினும் உண்மைகளை வெளிப்படுத்துவதில் பாரிய மோசடிகளை இந்த அரசாங்கம் செய்து வருகின்றது. கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி ஜனாதிபதியின் கைகளில் அறிக்கை கிடைக்கப்பெற்ற போதிலும் இன்றுவரையில் அறிக்கை குறித்து வாய் திறக்காது செயற்பட்டு வருகின்றார். மத்திய வங்கி அறிக்கை இன்னும் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை, பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படவில்லை.
ஆனால், அறிக்கையை மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகிய இருவருக்கும் ஜனாதிபதி கொடுத்துள்ளார். கள்வர்களிடமே அறிக்கையினை ஏன் கொடுத்தார்? பிரதமரும் அறிக்கையினை பெற்றுக்கொண்டுள்ளார். அறிக்கை கிடைக்கப்பெற்று 16 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் உரிய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தனது பதவிக் காலம் குறித்து ஆராய்ந்துகொண்டிருக்கின்றார்.
எமக்குக் கிடைத்துள்ள இரகசிய தகவலின் படி அறிக்கையில் மாற்றம் கொண்டுவரப்படுவதாக தெரிய வருகின்றது. குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் அறிக்கை மாற்றியமைக்கப்படுவதாக தெரிய வருகின்றது. அறிக்கையில் ஒரு எழுத்தேனும் மாற்றம் பெற்றிருப்பின் அதனை நாம் வேடிக்கை பார்க்க மாட்டோம். தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தில் இப்போது மேடைகளில் பொய்யான கருத்துக்களை கூறினாலும் குற்றவாளிகள் அனைவரையும் காப்பாற்றும் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி தான் நடுநிலையான தலைவர் என கூறுவது உண்மையெனின் குற்றவாளிகளை தண்டிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.