Top News

ராஜித சேனாரத்ன பேசினால் பொய் செய்தால் மாறுபாடு ; இபாஸ் நபுஹான் சாடல்



அமைச்சர் ராஜித பேருவளைக்கு  சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கள்ளன் என கூறி கூறியே காலத்தை கடத்தாமல்,இவ்வாட்சி காலத்தில் அம்மக்களுக்கு பெற்றுக்கொடுத்த விடிவு என்ன என்பது பற்றி பேச முடியுமா என பாணதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அளுத்கமை, பேருவளை என்ற பெயர்களை கேள்வியுற்றாலே அனைவருக்கும் அங்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் இடம்பெற்ற கலவரம் தான் நினைவுக்கு வரும். இப்போது அங்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள்,அதனை மையமாக கொண்ட பிரச்சாரத்தையே மேற்கொள்ள வேண்டும்.அதுவே பொருத்தமானதும் கூட.

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோர் அளுத்கமை, பேருவளையில் ஐ.தே.கவுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் பிரதான பேசுபொருளாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திருடினார் என்பதே அமைந்துள்ளது.

இதுவா அம் மக்களின் முதன்மை பிரச்சினை? அன்று இடம்பெற்ற கலவரத்தில் போது மூன்று உயிர்கள் பறிபோயிருந்தன. அவர்களுக்கு நஸ்டயீடு வழங்கப்போகிறோம் என்றார்கள். இதுவரை வழங்கப்படவில்லை. அக் கலவரத்தின் போதான எந்தவொரு விடயத்திற்கும் இவ்வரசால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

இவர்களால் எப்படி கலவரம் பற்றி பேச முடியும்? அப்படி பேசுவதானால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நஸ்டயீடுகளைத் தான் பேச வேண்டும்.

அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் அளுத்கமை கலவரம் பற்றி ஊடகவியலாளர்கள் வினா எழுப்பிய போது, அது பற்றி தனக்கு தெரியாது என கூறியிருந்தார். தனது மாவட்ட மக்களது பிரச்சினை பற்றி கரிசனையற்றவர், அங்கு வந்து, தனது கட்சிக்கு வாக்கு கேட்க வெட்கப்பட வேண்டும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஊடகவியலாளர்கள் வினா எழுப்பிய போது, அக் கலவரத்துக்கு தீர்வுபெற்றுக் கொடுக்கப்பட்டதாகவே கூறியிருந்தார்.இப்படியான ஒரு கட்சிக்கு வாக்கு கேட்டுச் செல்பவர்கள் வெட்கப்பட வேண்டும்.

வாக்கு கேட்டு வருவது, வேட்பாளர்களின் உரிமை. அவர்கள் தங்களுக்கு என்ன செய்துள்ளார்கள் என்பதை ஆராய்ந்து வாக்களிப்பது வாக்காளர்களின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டார்.
Previous Post Next Post