ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சிகண்டு நிராகரிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எம்மை மீட்டெடுத்தார். அந்த நன்றியை ஐக்கிய தேசியக் கட்சியினரும் மறந்துவிடக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக தெரிவித்தார். கடினமான நேரத்தில் உதவிக்கு வந்தவரை அமவதிக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழுவின் விசாரணையில் நான் எந்தவிதமான தவறையும் காணவில்லை. சுயாதீனமாக உண்மையாக இந்த விசாரணைகளை இடம்பெற்று வருகின்றது. அதற்கும் எம்மில் பலர் ஒத்துழைப்புகளை வழங்கினர். இறுதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி விசாரணைகளை பூரணப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.
அவ்வாறு இருக்கையில் இப்போது பொய்யான விமர்சனங்களை முன்வைத்து ஜனாதிபதியை அவமதிக்கும் செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுப்பது மிகவும் மோசமான செயற்பாடாகும். ஐக்கிய தேசியக் கட்சியில் ஊழல் இல்லை, மாறாக மஹிந்த தரப்பினர் கூச்சலிட்டு தம்மைத் தாம் கள்ளர்கள் என காட்டிக்கொண்டுள்ளனர். நாமும் அவ்வாறு செய்தால் எமக்கும் அவர்களுக்கும் இடையிலான வித்தியாசம் அற்றுப்போய்விடும். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி ஒழுக்கத்தை சரியாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக ஜனாதிபதி குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் இது குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.