Top News

திருடன் யார் என்பது மக்களுக்குத் தெரியும்- ஜனாதிபதி



பாராளுமன்றத்தில் நேற்று (10) இரு பக்கமும் இருந்தவர்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்து திருடர்கள் என கூக்குரல் இட்டுக் கொண்டதாகவும், இந்நாட்டு மக்கள் உண்மையில் திருடர்கள் யார்? திருடாதவர்கள் ? யார் என்பதை நன்கு அறிந்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எவரும் இருக்கவில்லை. சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் கலந்துகொள்ள அனைவரும் அனுராதபுரத்துக்கு வருகை தந்திருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அனுராதபுரத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
இன்றைய அரசியல் நிலைமை எவ்வாறென்றால், கொழும்பு  கோட்டை நடைபாதை வியாபாரிகளிடையே செல்லும் அப்பாவி பொதுமகனின் பணத்தைத் திருடும் திருடனைப் போன்றதாகும். திருடன் பணத்தைத் திருடியவுடன் அவனின் பின்னால் பணத்தின் உரிமையாளன் திருடன் திருடன் எனக் கூறிக் கொண்டு விரட்டிச் செல்வான். அப்போது பொது மக்களும் அந்த இருவரின் பின்னால் விரட்டிச் செல்வார்கள்.
கொஞ்சம் தூரம் சென்றவுடன் திருடனும் சேர்ந்துகொண்டு முன்னால் திருடன் ஓடுகிறான். அவனைப் பிடியுங்கள் எனக் கத்துவதற்கு ஆரம்பித்துவிடுகின்றான். இதனால், திருடனும் மக்களோடு மக்களாக சேர்ந்து விடுகின்றான். இதுதான் இன்றைய அரசியலிலும் நடைபெறுகின்றது எனவும் ஜனாதிபதி விளக்கிக் கூறினார்
Previous Post Next Post