100 நாட்களுக்குள் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பேன் என பதவியாசை அற்றவரைப் போன்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன, தனது ஆட்சிக்காலம் நிறைவடையும் கடைசி நாள் தொடர்பில் ஆராயுமளவு பதவியாசையின் உச்ச நிலைக்கு சென்றுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
பொதுவாக ஒரு பதவிக்கு வருவதற்கு முன்பு அரசியல் வாதிகள் கூறுவதை, அப் பதவியில் அமர்ந்த பிறகு நிறைவேற்றுவதில்லை. எங்கள் ஆட்சிக்காலத்தில் நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை இயன்றளவு நிறைவேற்றினோம்.
தற்போது ஜனாதிபதியாகவுள்ள மைத்திரிப்பால சிறிசேன ஆட்சிக்கு வருவதற்கு பல வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தார். அதில் பிரதானமானது ஜனாதிபதியின் எல்லையற்ற அதிகாரங்களை நீக்குவது. அவரது வாக்குறுதியில் உள்ள விசேடம், அதனை 100 நாட்களுக்குள் நீக்குவதாகும்.
100 நாட்கள் அல்ல, 1000 நாட்களும் கடந்துவிட்டன.அவர் அது பற்றி எதுவும் உருப்படியாக செய்யவில்லை. தற்போது அது பற்றி பேசுவதாக கூட இல்லை. பதவி ஆசை யாரைத்தான் விட்டு வைத்துள்ளது.அவர்கள் பிரதானமாக மக்கள் மன்றத்தில் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றாமல் உள்ளமையே, அவர்கள் ஆட்சி முழுமையாக தோல்வியடைந்துள்ளமைக்கான சான்றாகும்.
தான் ஆட்சி வந்து 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் என கூறியவுடன் எல்லோரும் ஜனாதிபதி மைத்திரிப்பாலவை ஒரு தியாகியாக பார்த்தனர். அப்படியானவர், இப்போது தனது ஆட்சிக்காலம் எப்போது முடியுமென இப்போதே சிந்திக்க ஆரம்பித்துள்ளார்.
தனது ஆட்சியின் இறுதி நாளை, ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன அறிய விரும்புகிறார் என்றால், இவ் ஆட்சிக் காலத்தின் இறுதி நாள் வரை ஆட்சியில் இருக்க வேண்டுமென, அவர் இப்போதே திட்டமிட்டுள்ளதை அறிந்துகொள்ள முடியும். இவரது ஆட்சி முடிவதற்கு சில ஆண்டுகள் உள்ளமை சாதாரண ஒருவருக்கு தெரிந்த விடயம். அப்படி இருக்கையில், அவசரமாக தனது பதவிக்காலப் பகுதி தொடர்பில் ஆலோசனை கோரியிருப்பது, தனது ஆட்சிக்காலப் பகுதி விரைவாக முடிந்துவிடுமென அஞ்சிக்கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
இதை பதவி ஆசையின் உச்ச நிலை எனலாம் என குறிப்பிட்டார்.