Top News

கிழக்கு மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?




நடைபெற இருக்கும் இந்த வட்டாரத் தேர்தல் கிழக்கு முஸ்லீம்களின் தலையெழுத்தினை தீர்மானிக்கின்ற ஒரு தேர்தலாக காணப்படுகிறது. பெருந் தலைவர் அஷ்ரபின் கருத்தியலின்படி "முழு கிழக்கு முஸ்லீம்களும் ஒரு அணியாக  திரளும் போது, பேரம் பேசும் சக்தியின் மூலம் எமது நாட்டில் 26 வது மாவட்டமாக கரையோர மாவட்டத்தினைப் பெற்றுக் கொள்வது. மேலும்  வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என தீர்வை  முன்வைக்க சகல தரப்பினரும் பங்கு கொள்ளும் பேச்சுவார்த்தையின் போது இத்தீர்வுக்கு சம்மதிக்க    நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகை நாம்  பெற்றுக்  கொள்வது" என்பதே கிழக்கு முஸ்லீம்களின் தாரக மந்திரமாகும்.

இவ்விலக்கினை  நோக்கி  பயணிக்காது 18 வருடங்களுக்கு  மேல் சுயதேவைப்  பூர்த்திகளுக்காகவே காலங்கள் நகர்ந்தது  எனலாம். நோர்வே பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 2004 ம் ஆண்டிற்குப் பின்  நீண்ட காலமாக,  எந்தக் கருத்தும் கூறாது இருந்த ஹக்கீம், அண்மையில் நேத்ரா தொலைக்காட்சியின் 'வெளிச்சம்' நிகழ்ச்சியில் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது “வடக்கு கிழக்கு இணைப்புக்கு முன் வடக்கு கிழக்கு மாகாண மக்களிடமும், பாராளுமன்றத்திலும் இந்த இணைவுக்கு சம்மதமா? எனக் கேட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதற்கு “ஆம்” என முடிவு வரும் போது மாத்திரம் நடக்கும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு கரையோர மாவட்டம், மற்றும் நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகு போன்றவைகளை பேசிப் பெற்றுக் கொள்ளலாம்” என்ற. ஹக்கீமினது சிறு பிள்ளைத்தனமாக  பட்டும் படாமலும் சொல்லிய  இந்த  கருத்து எதோ ஒரு பாரிய சதிக்குள் கிழக்கு மக்களை ஹக்கீம் தள்ளி விடப் போகிறார்  என்பதை உணர்த்தக் கூடியதாக இருந்தது.

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான பூர்வாங்கப் பேச்சுக்களில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, தமிழ்க் கூட்டமைப்பு, புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள்  பிரதான பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பன அறிக்கை விடும் போது, முஸ்லீம்களின் ஏக பிரதிநிதிக் கட்சியான  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ஹக்கீமிடம் பேசியதன் பிரகாரமே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுட்டிக் காட்டுவதை நோக்கும் போது பாதக தந்திரமான அணுகுமுறை  ஒன்று உள்ளே மறைந்திருக்கின்றது என்பது தெளிவாகிறது, இதனை கிழக்கு முஸ்லீம்கள் மறு கோணத்தில் அபாய எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது. அத்துடன் கிழக்கு மக்களுக்கும், கிழக்கைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளுக்கும், பிரதேச அரசியல் வாதிகளுக்கும் கிழக்கு முஸ்லீம் பிராந்தியத்துக்கும் ஹக்கீமின் இந்தப் போக்கு ஏதாவது கழுத்தறுப்புக்களை ஏற்படுத்துமா? என சிந்திக்கவும் வைத்துள்ளது எனலாம்.

ஜனாதிபதி மாற்றத்துக்கும், ஆட்சி மாற்றத்துக்கும், தமிழர் பிரச்சனையினை தீர்ப்பதற்கும் பின்புலமாக இயங்கிய நோர்வே, இந்தியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள், மற்றும் பல அமைப்புக்கள் இன்று தமிழர் தொடர்பான  பிரச்சனைகளில் காட்டும் அக்கறையும், தமிழர்களின் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும்படி நல்லாட்சிக்கு கொடுக்கின்ற அழுத்தங்களும், தமிழர் தொடர்பான பிரச்சனைகள்  தீர்வுக்குள் நெருங்கி வந்து விட்டது என்ற சமிக்ஞைகள் காட்டுகின்றன.

புதிய தீர்வுகளில் கவனம் செலுத்துவதை விட ஏற்கனவே செய்யப்பட்ட ராஜிவ் காந்தி, ஜெ.ஆர்.ஜயவர்தனவின் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தினை மீண்டும் தற்காலிகம் என்ற பெயரில் மீள அமுல்படுத்தும் படியும், அமுல்படுத்திய பின் தீர்க்கப்படாத பிரச்சனைகளை தீர்த்து, மெருகூட்டி செயல்படுத்தும் படியும் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் மோடியினால்  நல்லாட்சி அரசிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்செயற்பாடுகளை நாங்கள் கிழக்கு முஸ்லீம் மக்களின் ஒருவனாக, பிரதிநிதியாக இருந்து சிந்தித்து நோக்கினால் வடக்கு கிழக்கு இணைவானது  “நிரந்தரம்” எனும் போது ஹக்கீம் “வெளிச்சத்தில்” சொன்னதன் பிரகாரம் நடக்கும், ஆனால் “தற்காலிகம்” எனும் போது  இதன் அர்த்தமானது, வடக்கு கிழக்கு இணைவுக்கு பாராளுமன்ற வாக்கெடுப்பு அவசியமில்லை எனவும், கிழக்கு முஸ்லீம் மக்களின் விருப்பு தொடர்பான  தேர்தல் தேவையில்லை எனவும், முஸ்லீம்கள் கேட்கும் கரையோர மாவட்டம், அல்லது நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகு தொடர்பாக பேச வேண்டிய அவசியமில்லை எனவும், வடக்கு கிழக்கு இணைவு தொடர்பான சட்டச் சிக்கல்களை, வழக்குகளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அகற்றி விடலாம் எனவும்,  தற்காலிகமாக 20  வருடங்கள் கடந்தால் அது நிரந்தரமாகி விடும் எனவும் அவர்களது ராஜதந்திர திட்டமானது சொல்லாமல் சொல்லுகிறது. இதன்படி இங்கு முஸ்லீம்களுக்கு எதுவுமே இல்லாத தீர்வையே நடைமுறைப்படுத்த, தந்திரமாக ‘தற்காலிகம்’ என்ற யோசனையை அமுல் படுத்த இந்த டயஸ்போராக்கள் பண பலத்தினைக் கொண்டு பதுங்கிப் பாய தயாராக உள்ளனர் என்பது தெளிவு.

இவ்விடயங்கள் அனைத்தும் ஹக்கீமுக்கு தெரியாமல் நடைபெறவில்லை, டயஸ்போராக்களின் திட்டத்துக்கு  ஹக்கீம் தலை  சாய்ந்த பக்கத்தை மறைத்து, அன்று வெளிச்சம் நிகழ்ச்சியில் ஹக்கீம் தான் நல்லவன் என காட்டிக் கொள்வதற்காக நடக்க சாத்தியமற்ற மறு பக்கத்தினை ஹக்கீமினது கருத்தாகக் கூறினார். இப்படித்தான் ஹக்கீம் கிழக்கு மக்களை தொடர்ந்து முட்டாளாக்கி ஏமாற்றி வருகிறார். தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வுக்கு, கிழக்கு முஸ்லீம் மக்களை பலியாக்கி  மேற்கொள்ள வெளிநாடுகள், பொது அமைப்புக்கள், நல்லாட்சி அரசு, மற்றும் தமிழ் கூட்டமைப்புடன் ஹக்கீம் போன்றவர்கள் இறுதியும் அறுதியான முடிவிற்குள் சென்று விட்டார்கள், ஆனால் இங்கு என்ன பேசப்பட்டது என்ற விடயங்கள் ஹக்கீம் உட்பட பலராலும் ரகசியமாக பேணப்பட்டாலும், இன்று அது கசிந்துள்ளது. இத்திட்டத்தினை அமுல்படுத்த, ஹக்கீமை பிரதான தாயமாகக் கொண்டு சகல காய்களும் நகர்த்தப் படுகின்றன. இதன் அடுத்த கட்டமாக பேச்சுவார்த்தை மேடையில் ஹக்கீமை கட்டாயம் அமர்த்த வேண்டிய தேவை டயஸ்போராவுக்கு காணப்படுகிறது. இதனால் தான் நடைபெற இருக்கின்ற இந்த வட்டாரத் தேர்தலில்  ஹக்கீமை  வெற்றியடையச் செய்ய டயஸ்போராக்கள் ஹக்கீம் மீது காசு மழையை பொழிந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் ஹக்கீம் என்ற பூனை பதுங்குவது இந்த காசு மழைக்குத்  தான் என்ற சங்கதி ஹக்கீமின் அண்மைக்கால கட்சி அத்துமீறல்களும்  நடவடிக்கைகளும், கசிந்த பல ரகசியங்களும் தெளிவாக காட்டுகின்றது. இவ்விடயங்களை நன்கு தெரிந்து கொண்ட ஹஸனலி, பஷீர் சேகுதாவூத், நஸார் ஹாஜி  போன்றோர்கள்  இதன் உண்மைத் தன்மையினை  கிழக்கில் காணப்படுகின்ற ஏனைய பல முஸ்லீம் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி, அலசி ஆராய்ந்ததில்  நடைபெற இருக்கும் தமிழர் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை மேடைக்கு ஹக்கீமை அனுப்பினால், கிழக்கு முஸ்லீம்களை  இலங்கையின்  வரைபடத்தில் இருந்து அகற்றி விட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், கிழக்கில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய சூழ் நிலையினை உருவாக்கியது கிழக்குக்கு வலிமை சேர்க்கிறது எனலாம்.  

சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கை தூக்கியது   20 வது, 18 வது திருத்தச்சட்டமூலங்களுக்கு பாராளுமன்றத்தில் கை தூக்கியது, 20 க்கு 20 மாகாணசபை சட்டத்துக்கு ஆதரவாகவும்,    பிரதேச சபை சட்ட மூலத்துக்கு  ஆதரவாகவும்    பாராளுமன்றத்தில் கை தூக்கியது என முஸ்லீம்களுக்கு விரோதமான விடயங்களுக்கு ஆதரவளித்து விட்டு ஒன்றைக் காட்டி ஒன்றைச் செய்து என்னை ஏமாற்றி விட்டார்கள் என சொல்லி மழுப்பிய ஹக்கீம், வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஆதரவளித்து விட்டு முஸ்லீம்களுக்கு எதுவுமே இல்லாத பட்சத்தில், என்னை ஏமாற்றி விட்டார்கள் என   கையை விரித்து விட்டால், எல்லாம் முடிந்த பின் கிழக்கு மக்களால் எதுவுமே செய்ய முடியாத  ஒரு நிலை ஏற்படும், முஸ்லீம்களுக்காக என இன்னொரு முறை எல்லோரும் ஒன்று கூடி பேசப் போவதில்லை. எனவே இச்சதியில் இருந்து விடுபட, நாம் அனைவரும் முன்கூட்டியே யோசித்து, ஒன்றிணைந்து நடைபெற உள்ள வட்டாரத் தேர்தலில் ஹக்கீமை தோற்கடித்து தமிழர் தீர்வு என்ற பேச்சுவார்த்தை மேடைக்கு ஹக்கீம் போவதை தடை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு ஹஸனலி, பஷீர் சேகுதாவூத் நஸார் ஹாஜி  போன்றோர்கள்  உட்பட கிழக்கின்  பல கட்சிகளும் முன் வந்தனர் என்பது வரவேற்கத்தக்கது.

இதன் வெளிப்பாடே கிழக்கையும், கிழக்கு மக்களையும், அஷ்ரபின் கனவையும், காப்பாற்ற  ஹக்கீம் காங்கிரசை தோற்கடித்து, வெற்றி பெறுகின்ற முஸ்லீம் கூட்டமைப்பு என்ற அணி தமிழர் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை மேடையில் அமர்ந்து, எங்களது கிழக்கை நாம் டயஸ்போராவுக்கு பலி கொடுக்காது பாதுகாக்க வேண்டும் என உறுதி கொண்டுள்ளனர். இதற்காக ஹக்கீமை எதிர்த்து தேர்தலில் களமிறங்க ஒரு கூட்டும், தேர்தலின் பின் ஹக்கீமின் கைக்கு அதிகாரம் போகாதபடி ஆட்சியமைக்க ஒரு கூட்டும் என இங்கு ஒரு முஸ்லீம் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இக்கூட்டமைப்பில் ஹக்கீமைத் தவிர அனைவரும் எதோ ஒரு வகையில் உள்வாங்கப் பட்டுள்ளனர் என்பது உறுதியானது.

ஹக்கீம் பலவீனமாக இருந்தால் எதாவது செய்யலாம்  ஆனால் பலவீனமே ஹக்கீமாக இருந்தால்?, வேலியே பயிரை மேய்ந்த கதையாகி விடும்,  ஒரு நாள் கிழக்கு மக்கள் தன்னை முற்றாக நிராகரிப்பார்கள் என்று  ஹக்கீமுக்குத் தெரியும்,   வடக்கு கிழக்கு இணைப்பு  சம்பந்தமான தமிழர் பிரச்சனைத் தீர்வில், ஹக்கீமின் பங்களிப்புக்கு  கிடைக்கப் போகின்ற வெகுமதியானது, இறுதி போகமாகவும் பெரிய ஒரு அறுவடையாகவும் செய்து பெருவதற்காகவே ஹக்கீம் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும்  இவ்வளவு குத்து வெட்டுக்களையும், கழுத்தறுப்புக்களையும் செய்கிறார். இதில் அவரது இலக்கினை அடைந்தவுடன், இந்தக் காட்சியைப் பற்றி ஹக்கீமுக்கு கணக்கே இருக்காது என்பதுடன் கிழக்கில் முஸ்லீம்கள் இருக்கின்றார்கள் என்பதற்கு சான்றும் இருக்காது, இருந்தாலும் அது அடிமைச் சாசனமாகவே இருக்கும்.

ஹக்கீமினால் எமது சமூகம் பல வழிகளில் கண்ட வீழ்ச்சியினையும், காணப்போகின்ற அழிவினையும்  முஸ்லிம் கூட்டமைப்பு மக்களுக்கு தெளிவு படுத்தியத்தைத் தொடர்ந்து, கிழக்கில்  மக்களின் செல்வாக்கினை இழந்துள்ள ஹக்கீம் காங்கிரஸ் இன்று தனது ஆதரவினை அதிகரித்துக் கொள்ள, பணத்தால் பெற முடியாத ஆதரவை “செண்டிமெண்டினால்” பெற்றுக் கொள்ள எடுத்த முயற்சிக்கு அட்டாளைச்சேனையே முதலில் பலியாகிறது, அட்டாளைச்சேனை மக்கள் தேசியப் பட்டியலுக்காக மட்டும், ஹக்கீமுக்கு வாக்களித்து முழு கிழக்கையும்  டயஸ்பொறாவுக்கு பலிகொடுக்க காரணமாக இருந்து விடாதீர்கள். அப்படி நடந்தால்    முஸ்லீம்களின் வரலாறு இதனை சாட்சியாக  சொல்லும், வாகனம் எரியும் , பதவிகள் மாறும் இது போல் இன்னும் எத்தனையோ நாடகங்கள் ஹக்கீம் காங்கிரஸினால் தயாரிக்கப்படும், மக்களே ஏமாந்து விட வேண்டாம், விழிப்படையுங்கள், உங்கள் கிழக்கு மண்ணை நீங்களே டயஸ்போராவிடம்  இருந்து பாதுகாருங்கள், எங்களது எதிர் கால சந்ததிகளின் தலைகளை பாதுகாக்க, முஸ்லீம் தேசியத்தை உருவாக்க அனைத்து கிழக்கு முஸ்லீம் மக்களும் ஒன்றிணைந்து செயற்படுங்கள். ஹக்கீமிடம் இருந்து கிழக்கை மீட்டெடுங்கள்.
அமீர் மௌலானா  

Previous Post Next Post