கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகள் உருப்படியாக எதையுமே செய்யவில்லை எனவும், தங்களது பிரதிநிதித்துவத்தையும், அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே போராடி வருகின்றன எனவும், தூய முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்கட்சித் தலைவருமான ஹனீபா மதனி கூறினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு மற்றும் தூய முஸ்லிம் காங்கிரஸ், சிவில&##3021; அமைப்புக்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு, அம்பாறை மொண்டி ஹோட்டலில் நேற்று (01) இடம்பெற்ற போதே ஹனீபா மதனி இவ்வாறு தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், அவர் மேலும் கூறியதாவது,
இலங்கையின் அரசியல் வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு மாவட்டமாக அம்பாறை மாவட்டம் திகழ்ந்து வருகின்றது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டமான அம்பாறையை பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோ, தேசிய காங்கிரஸோ அல்லது வேறு பேரினவாதக் கட்சியோ, முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பாரிய பிரச்சினைகளை குறிப்பாக நுரைச்சோலை வீட்டுத்திட்டப் பிரச்சினை, வட்டமடு காணிப் பிரச்சினை மற்றும் பொத்துவில் நிலப் பிரச்சினை ஆகியவை உட்பட இன்னோரன்ன பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறி இருக்கின்றன.
இந்த சந்தர்ப்பத்திலே அனுபவ ரீதியாக முடியாத ஒரு தளத்திலே இருந்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களின் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பும் இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும், நாங்களும் இணைந்து ஒரு புதிய தளத்திலே, சமூகத்தின் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம்.
தமிழர்களின் நலன்களுக்காக பாடுபடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்று, இந்த முஸ்லிம் கூட்டமைப்பும், எங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் என்ற பாரிய நம்பிக்கை எமக்கு நிரம்பவே உண்டு.
தனி மரங்கள் தோப்பாகாத நிலையில், தோப்புக்கள்தான் எங்களுக்கு வாழ்வு தரும் என்ற அந்தப் பெரிய எண்ணப்பாட்டுடன், நாங்கள் இதிலே இணைந்து பயணிக்க வந்திருக்கிறோம்.
ஏற்கனவே, அரசியல் கட்சி ஒன்றுடன் இணைந்து பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில், பெரியதோர் நம்பிக்கையுடன், பொதுப்பணியில் இலட்சிய வெறியுடன் நாங்கள் பயணிக்க எண்ணிய போதும், அதிலே எமக்கு தோல்விதான் கிட்டியது.
அதனால்தான் எமது பயணத்தை இடைநிறுத்தி மற்றுமோர் சந்தியிலிருந்து, ஒரு புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம். இறைவன் எமக்கு வெற்றியைத்தர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் என்று கூறினார்.