Top News

கல்முனை மாநகர சபைத்தேர்தலும் சூழ்ந்துள்ள ஆபத்துக்களும்



வை எல் எஸ் ஹமீட்

இன்று கல்முனை மாநகரத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுவிடுமா? என்கின்ற ஓர் அச்சமான சூழ்நிலை தோன்றியிருக்கின்றது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று: ஊர்களுக்கிடையில் ஒற்றுமையின்மை. சகோதர ஊர்களைப்பற்றிக் கவலைப்படாத நிலை. இரண்டு: ‘முஸ்லிம்களுக்காவே நாம்’ என்று கோசம் எழுப்புகின்ற அரசியல் கட்சிகள் யதார்த்தத்தில் முஸ்லிம்கள் வீழ்ந்தாலும் நம் கட்சிகள் வாழவேண்டும்; என நினைப்பதும் அதனைப் புரிந்துகொள்ள முடியாமல் சமூகம் தவிப்பதும்.

ஆசனப்பங்கீடு
——————-
கல்முனை மாநகரசபைக்கான மொத்த ஆசனங்கள் 40. விகிதாசாரப்படி  சாய்ந்தமருதுக்கு 11 ஆசனங்கள்.  தமிழருக்கு  12. எஞ்சியிருப்பது 17. ஆட்சியமைக்கத் தேவையான ஆசனங்கள் 21. சாய்ந்தமருது சுயேற்சைக்குழு மாநகர  சபையில் எந்த ஒரு அணியுடனும் சேர்வதில்லை; என்று ‘பைஅத்’ செய்திருக்கிறார்கள்.

சாய்ந்தமருதுக்குரிய 11 ஆசனங்களையும் சுயேற்சை பெறுகிறது என வைத்துக்கொள்வோம். எஞ்சியிருக்கின்ற 17 ஆசனங்களையும் ஓரே கட்சி பெறுகின்றது அல்லது பல கட்சிகள் பெற்று ஆட்சியமைப்பதற்காக  அவை ஒற்றுமைப்படுகின்றன; எனவும்  வைத்துக்கொள்வோம். ( அவ்வாறு ஒற்றுமைப்படுவார்களா? என்பது வேறு கேள்வி)

இப்பொழுது முஸ்லிம்களால் தனித்து ஆட்சியமைக்க முடியாது. அவ்வாறாயின் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழ்த்தரப்புடன் கூட்டுச்சேர வேண்டும். அவ்வாறு கூட்டுச்சேர்ந்தால் கல்முனையை நான்காகப் பிரிப்பதில் அவர்கள் ஒருபோதும் உடன்பாடு காணமாட்டார்கள். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? அதேநேரம் இந்த சுயேற்சைக் குழுவை இயக்குகின்றவர்களின் நோக்கம் தமிழர்களுக்கு மாநகராட்சியில் பங்கு கொடுப்பதா? என்ற தர்க்க ரீதியான ஓர் கேள்வி ( உண்மையில்லை என்றால் கூட) எழுவதைத் தவிர்க்க முடியாது. ஏனெனில்  சுயேச்சைக்குழு எதிர்பார்ப்பது சாய்ந்தமருது மொத்த வாக்குகளும் தமக்கு கிடைக்க வேண்டுமென்றாகும். அதன்பொருள் 11 ஆசனங்களை பெறவேண்டும்; என்பதாகும். அவ்வாறு 11 ஆசனங்களைப் பெற்றால் எஞ்சுகின்ற முஸ்லிம் அங்கத்தவர்கள் 17. அவ்வளவுபேரும் ஒன்று பட்டாலும் ஆட்சியமைக்க முடியாது. பைஅத்தின் பிரகாரம் சுயேச்சையும் அணிசேராது; என்றால் அதன் பொருள் தமிழ்த்தரப்புடன் இணைந்து ஆட்சியமையுங்கள்; என்பதைத்தவிர வேறு எது இருக்கமுடியும்; என்ற கேள்வி தர்க்க வாதத்திற்கு முரணா?

இதன் மூலம், கல்முனையில் 17 ஆசனங்களையும் பெறாவிட்டாலும் அதிகூடிய ஆசனங்களைப்பெறக்கூடிய கட்சி எது என்று எல்லோருக்கும்  தெரியும். ஆனாலும் அந்தக்கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியாது. பைஅத்தின் பிரகாரம் சுயேச்சையும் ஆதரவு வழங்காத நிலையில் அந்தக்கட்சியை தமிழத்தரப்புடன் இணைந்து ஆட்சியமைக்க நிர்ப்பந்தித்து அதனை அக்கட்சிக்கெதிராக பிரசாரம்செய்து அக்கட்சியை மக்கள் மத்தியில் செல்வாக்கிழக்கச் செய்யும் நோக்கம் இதற்குப் பின்னால் இருக்கின்றதா? என்ற கேள்வியும் தர்க்க வாதத்திற்கு முரணா?

இவ்வாறான குற்றச்சாட்டை நான் முன்வைக்கவில்லை; ஆனால் தர்க்கரீதியாக இவ்வாறான கேள்வி எழுவதைப் பிழையென கூறமுடியாது. நான் இங்கு கூறமுற்படுவது, நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுக்கின்றபோது முன்னும் பின்னும் யோசித்து எடுக்க வேண்டும். வெறும் உணர்ச்சிகளால் தீர்மானம் எடுக்கக் கூடாது. சரி பைஅத் செய்துவிட்டோம்; அடுத்த நிலைப்பாடு என்ன?

 சுயேற்சைக்குழு தனது ‘ பைஅத்தை’ மீறவேண்டும். ‘ பைஅத்’ என்பது இறைவனை முன்னிறுத்தி செய்கின்ற ஒன்றாகும். மீற முடியுமா? குறிப்பாக, சுயேச்சைக்குழு அல்லாஹ்வின்  பள்ளியை நிர்வகிப்பவர்களால் போடப்பட்டு சில உலமாக்களின் பங்குபற்றுதலோடு களம் கண்டு கொண்டிருப்பவர்கள். எனவே ‘ பைஅத்தை’ மீறுவதன் பாரதூரத்தைப்பற்றி அவர்களுக்குத் தெரியும். மீறவிடுவார்களா? அதனையும் தாண்டி மீறினால் அதன் பாவம் யாருக்கு?

சரி, மார்க்கரீதியாக ஏற்படுகின்ற விளைவுகளையெல்லாம் புறக்கணித்து  ‘ பைஅத்தை’ மீறுகிறார்கள்; என வைத்துக் கொள்வோம். இப்பொழுது அவர்களுக்கு இரு தெரிவுகள் இருக்கின்றன. ஒன்று: தமிழ்த்தரப்புடன் இணைவது;
இரண்டு: முஸ்லிம் தரப்புடன் இணைவது.

தமிழ்த்தரப்புடன் இணைந்தால் முஸ்லிம்கட்சிகளை மீறி தமிழ்க்கட்சிகள் சாய்ந்தமருதுக்கு பிரதேச சபையை பெற்றுக்கொடுத்துவிடுமா? சுயேற்சைக்குழு மொத்த ஆசனங்களையும் பெற்றுவிட்டால் ஜனாதிபதி முஸ்லிம் கட்சிகளைப் புறந்தள்ளி நேரடியாக சபையை பெற்றுக்கொடுப்பார்; என சிலர் நினைக்கின்றனர். இது அரசியல் யதார்த்தம் புரியாத தன்மையாகும்.

மறுபுறத்தில் அவ்வாறு  தமிழ்த்தரப்புடன் கூட்டுச்சேர்ந்து சுயேச்சைக்கு  மேயர் பதவி கிடைத்தாலும் கல்முனை மார்க்கட் உட்பட பல விடயங்களில் நீண்டகாலமாக குறிவைத்திருக்கின்ற தமிழ்த்தரப்பிற்கு கல்முனை முஸ்லிம்களுக்கு பாதகமான முறையில் பல விட்டுக்கொடுப்புக்களைச் செய்யவேண்டி வரும். இது இரு ஊர்களுக்குமிடையில் எவ்வாறான ஒரு நிலையைத் தோற்றுவிக்கும்?

அல்லது, சுயேச்சை முஸ்லிம் தரப்புடன் இணைந்து ஆட்சியமைப்பது. அவ்வாறாயின் ஆக்குறைந்தது பத்து ஆசனங்களைப் பெறுகின்ற கட்சியுடன் அல்லது கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும். அவ்வாறு அதிகூடிய  ஆசனங்களைப் பெறக்கூடிய கட்சி மு கா எனக்கொண்டால்  சுயேச்சையின் பிரதான அரசியல் எதிரி இன்றைய நிலையில் மு கா வாகும். எனவே சுயேச்சை மு கா வுடன் இணைவதை விரும்புமா? அவ்வாறு இணைவதென்றால் கல்முனைக்கு எது நடந்தாலும் பரவாயில்லை; தனியான சபை தரவேண்டும்; என்று கேட்டால் மு கா சம்மதிக்குமா? அவ்வாறு சம்மதித்தால் அதன் எதிர்விளைவுகள்? எனவே மு கா வுடன் இணைவது சாத்தியம் குறைந்தது.

அடுத்த சாத்தியம்: அதிகூடிய ஆசனங்களை வன்னி அமைச்சரின் அணி பெறுகிறது; என்று ஒரு அதீத கற்பனை செய்தால் அங்கும் இதே இரண்டு சாத்தியப்பாடுகளே இருக்கின்றன. ஒன்று தமிழ்த்தரப்புடன் இணைவது. அவ்வாறு இணைந்தால் தமிழ்த்தரப்பு தொடர்பாக மேற்சொன்ன கூற்றுக்கள் இங்கும் பொருந்தும். அல்லது சுயேச்சையுடன் இணைவது. இது நடைமுறைச் சாத்தியம் கூடியது.

குறித்த சுயேச்சை இவரது பின்னணியைக் கொண்டது; என்ற  பலமான சந்தேகம் ஒரு புறம். சகோ: சிறாஸ் மீராசாஹிபைப் பட்டியலில் பெயரிட்டிருப்பது இன்னொரு புறம். இங்கு நாங்கள் சிந்திக்க வேண்டியது, பட்டியலில் சில முக்கியஸ்தர்களின் பெயர்களை இடுவதற்கு காரணம் அவர்களின் ஆதரவாளர்களின் வாக்குகளைக் கவருவதாகும்.

குறித்த அமைச்சரின் அணி நடைமுறையில் சாய்ந்தமருதில் போட்டியிடாத நிலையில் இவரது பெயர் ஏன் இடம்பெற்றது. சாய்ந்தமருதில் இருந்து வாக்குகளை எதிர்பார்த்தா? அவரது இடத்திற்கு அடுத்த ஊர்களில் இருந்து யாராவது பிரபலமான ஒருவரின் பெயரை இட்டிருந்தால் ஒரு சில வாக்குகளாவது கூடுதலாக எதிர்பார்த்திருக்கலாம். எனவே இவரது பெயரை பட்டியலில் இட்டதற்கான காரணம் வாக்குகளல்ல. அவ்வாறாயின் அங்கு வேறு ஒரு பின்னணி இருக்க வேண்டுமென்பது புரிந்துகொள்ள முடியாததல்ல.

எனவே, இந்த இரண்டு அணிகளும் இணையும் சாத்தியப்பாடு மறுக்கக் கூடியது அல்ல. ( இந்த அமைச்சரின் அணிக்கு அவ்வாறு ஆசனங்கள் கிடைக்குமா? என்பது வேறு ஓர் கேள்வி. இங்கு எடுகோள் ரீதியான சாத்தியப்பாடுகளே ஆராயப்படுகின்றன).

அவ்வாறு இணைந்தால் அந்த அமைச்சர் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை ( கல்முனைக்கு எது நடந்தாலும்) பெற்றுத்தர சம்மதிப்பார்; என்பதில் சந்தேகமில்லை. ( ஏற்கனவே அவ்வாறான ஏற்பாடு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை). ( ஏற்கனவே இந்தப் பிரச்சினையை பூதாகரமாக்கிய பாவத்தைச் செய்தவர் அவர்தான்)

அவ்வாறு நிகழ்ந்தால் மு கா வாழாவிருக்குமா?  எனவே இதன் நடைமுறை சாத்தியமும் சற்று அதீத கற்பனையாகும். அவ்வாறு சிலவேளை நடைபெற்றுவிட்டால்  அது இரு ஊர்களுக்குமிடையில் ஓர் பாரதூரமான நிரந்தரப் பகையை ஏற்படுத்திவிடாதா? ஏனெனில் தனியாக சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை என்பது கல்முனை  நகரைப் பறிகொடுக்கச் செய்யப்
படுகின்ற ஒரு முனைப்பு என்பது ஒரு தெட்டத்தெளிவான விடயமாகும்; இப்போராட்டத்தில் இறங்கி இருப்பவர்களின் உள்ளங்களில் அதனை ஜீரணிக்கின்ற சக்தி இல்லாதபோதும்.

இதுதொடர்பான தெளிவான புள்ளிவிபரத்தை ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றேன். சுருங்கக் கூறின் கல்முனைப்பட்டின சபை என்கின்ற தராசு நேராக இருந்தது. 1987 ம் ஆண்டு ஒரு தட்டில் கரவாகு தெற்கையும் இன்னுமொரு தட்டில் கரவாகு வடக்கு மற்றும் மேற்கு வைக்கப்பட்டது. இப்பொழுதும் அந்த balance இல் மாற்றம் ஏற்படவில்லை. இதில் ஒரு தட்டில் இருக்கின்ற பாரத்தை இறக்கினால் தராசு தனது balance ஐ இழக்கும். அது கல்முனைப் பட்டினம் என்ற அந்த நேரான தராசைப் பாதிக்கும். இதுதான் இங்குள்ள பிரச்சினை.

கல்முனை மக்கள் கூறுகிறார்கள், ஒரு தட்டில் இருக்கின்ற பாரத்தை மட்டும் இறக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இறக்குவதாக இருந்தால் இரண்டு தட்டிலும் ஏற்றியுள்ள  பாரத்தை இறக்கி கல்முனைப் பட்டினம் எனும் தராசின் balance ஐப்
பேணுவதற்கு அனுமதியுங்கள்; என்பதாகும். போராட்டத்தரப்பு கூறுகின்றது, அதையெல்லாம் பற்றி எங்களுக்கு கவலையில்லை, எங்களது பாரத்தை எங்களிடம் தந்துவிடுங்கள்; என்று. இதுதான் பிரச்சினையின் மையப்புள்ளியாகும்.

அறிவுரீதியாக எடுக்கக்கூடிய முடிவு
___________________________________
இன்று பல கட்சிகள் கல்முனையில் போட்டியிடுகின்றன. இதில் ஏதாவது ஒரு கட்சியின்
பக்கம் இத்தேர்தலில் மக்கள் சாய்ந்தாக வேண்டும். அவ்வாறு சாய்ந்தாலும் மேலே கூறியபடி சாய்ந்தமருதை விட்டால் ஆகக்கூடியது 17 ஆசனங்களைத்தான் பெறலாம். அது ஆட்சியமைக்க போதாது. சிலவேளை முஸ்லிம் பிரதேசங்களில் பல கட்சிப்போட்டிகாரணமாக பிரச்சினைகள் ஏற்பட்டு வாக்களிப்பு வீதம் குறையுமாயின் தமிழரின் ஆசனம் இன்னும் சற்று கூடலாம். அவ்வாறாயின் முஸ்லிம் ஆசனங்கள் 17 விட குறையலாம். இந்நிலையில் பல கட்சிகளுக்கு வாக்களித்தால் நிலைமை இன்னும் மோசமாகும்.

பழைய விகிதாசாரத்தேர்தலில் போனஸ் ஆசனம் இருந்ததோடு பெரும்பான்மை பெறாவிட்டாலும் அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற கட்சி ஆட்சியமைக்க முடிந்தது. இதுவும் விகிதாசாரத் தேர்தல்தான், ஆனாலும் பெரும்பான்மை தேவை. இந்நிலையில் முதலாவது கல்முனையைப் பாதுகாக்க விரும்பினால் இத்தேர்தலில் பல கட்சிகளுக்கு வாக்களிக்க முடியாது.

அதே நேரம் சாய்ந்தமருது மக்களுக்கு இரு தெரிவுகள் இருக்கின்றன. ஒன்று சுயேச்சை. அடுத்தது மு கா. மேலே குறிப்பிட்டதுபோல் அரசியல்  கட்சிகளின் ஒத்துழைப்பின்றி பிரதேச சபை என்பது தூரத்துப் பச்சையாகும்.

எனதருமை சாய்ந்தமருது சகோதர நெஞ்சங்களே!
சற்று சிந்தியுங்கள்! நீங்கள் மொத்தமாக சுயேச்சைக்கு வாக்களித்தும் உங்கள் இலக்கை அடைய முடியவில்லை; என்றால் அடுத்த கட்டம் என்ன? மீண்டும் போராட்டமா? அன்று சாஹிறா வீதியில் நடந்த கல் வீச்சை சிந்தியுங்கள். யார் சரி? யார் பிழை? என்பது இங்கு முக்கியமில்லை. அவ்வாறான ஒரு சூழ்நிலையைத் தோற்றுவிக்கும் மனோநிலை நம் சகோதரர்களுக்கு வந்துவிட்டதே! இலக்கியக் கலந்துரையாடல் நடந்த வீட்டில் நடந்த  அசம்பாவிதத்தை சிந்தியுங்கள்!! அவ்வாறான ஒரு மனோநிலையை இப்போராட்டம் உருவாக்கிவிட்டதே!

நாளை இப்போராட்டம் நம்மை எங்கே கொண்டுபோய்விடும் என்று சிந்திக்க மாட்டீர்களா? உங்கள் இலக்கை அடைவதற்கு எல்லா ஊர்களின் பலத்தையும் ஒன்றுசேர்த்து முயற்சிப்பதற்குப் பதிலாக போராட்டம்தான் ஒரேவழி என்ற மனோநிலையை ஏற்படுத்தியவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்று சிந்தித்தீர்களா?

அடிப்படையில் நியாயமான காரணம் இருந்தாலும் அரசியலுக்காக இளைஞர்களை உணர்ச்சியூட்டி பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்ததன்பின் இன்று மீண்டும் ஆரம்பித்த இடத்தில் வந்து நிற்கும் சகோதர சமூகங்களின் போராட்ட வரலாறுகளை நாம் மறந்துவிட்டோமா? ( LTTE, JVP). (இவை தொடர்பாக விரிவான ஓர் உரையை  இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2ம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனையில் நடைபெற இருக்கின்ற பொதுக்கூட்டத்தில் ஆற்ற இருக்கின்றேன்)

இது அவ்வாறான ஆயுதப்போராட்டம் இல்லை; என நீங்கள் வாதிடலாம். ஆனாலும் அசம்பாவிதங்கள உருவாக்கும் போராட்டம்; என்பது ஏற்கனவே நிருபிக்கப்பட்டுவிட்டதே!

சரி, சுயேச்சைக்குழு வெற்றிபெற்றது, இலக்கு அடையப்பெறவில்லை; என்று வைத்துக்கொண்டால் மாகாணசபைத்தேர்தலில் சுயேச்சை சாத்தியமா? ஏனைய ஊர்களின் ஆதரவு இல்லாமல். அதைச் சாத்தியப்படுத்துவதானால் ஒன்றில் எல்லா ஊர்களும் சேர்ந்து சுயேச்சை( சாத்தியமா?) அல்லது ஒரு கட்சியின் தயவை நாடித்தான் ஆகவேண்டும்.

எனவே, அறிவுக்குப் பொருந்தாத உணர்ச்சிகளுக்கு அடிமையாகி நமது ஒற்றுமையான எதிர்காலத்தை இழக்க வேண்டுமா?

சிலர் ஊரின் ஒற்றுமையை பறைசாற்ற சுயேச்சைக்கு வாக்களிக்குமாறு கோருகிறார்கள். இந்த ஒற்றுமை இதுவரை பறைசாற்றப்படவில்லை, உங்கள் போராட்டம் அந்த விடயத்தில் வெற்றியளிக்கவில்லை. என்கிறீர்களா? ஒற்றுமை எல்லோரும் வரவேற்கின்ற விடயம் . இஸ்லாமும் ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப்பிடித்துக்கொள்ளத்தான் சொல்கிறது. ஆனால் ஒற்றுமை என்பது ஒரு ஊருக்குள் மட்டும்தானா? ஊர்களுக்கு இடையில் இல்லையா?

ஒற்றுமை என்பது வேறு. குறித்த ஒரு விடயத்திற்காக எழுப்பப்படும் ஒற்றுமைக் கோசம் என்பது வேறு. ஒற்றுமையின் பெயரால் இன்று ஏற்றுகின்ற உணர்ச்சி உங்கள் இலக்கில் வெற்றிபெறத்தவறினால் என்ன வடிவம் எடுக்கும் என்று சிந்தித்தீர்களா? தமிழ் சமூகத்திடம் இருந்து நாம் பாடம் படிக்க மாட்டோமா?

சாத்தியமற்ற தமிழீழத்திற்கான வட்டுக்கோட்டைத் தீர்மானம் மொத்த தமிழ் சமூகத்தையும் ஒற்றுமைப்படுத்தவில்லையா? அதன் விளைவு 1977ம் ஆண்டு 18 ஆசனங்களை த வி கூட்டணிக்கு வழங்கவில்லையா? ஈற்றில் அந்த ஒற்றுமை 30 வருட யுத்தத்திற்குள் தள்ளவில்லையா?

எனவே, ஊரின் பெயராலும் ஒற்றுமையின் பெயராலும் உணர்ச்சியூட்டுவதன் விளைவைச் சிந்தியுங்கள்.  எல்லோரும் ஒற்றுமைப்பட்டு இத்தேர்தலில் ஒரு கட்சியின் பின்னால் அணிதிரண்டு நமது முதுசம் கல்முனையைப் பாதுகாப்பதோடு அந்த ஒற்றுமையின் பலத்தை வைத்து வாக்களிக்கும் கட்சியின் கழுத்தைப்பிடித்து யாருக்கும் பாதிப்பில்லாத தீர்வைக்காண முற்படுங்கள்.

அதேநேரம் கல்முனைக்குடி, மருதமுனை, நற்பிட்டினை மக்கள் இந்தச் சோதனையான கட்டத்தில் அல்லாஹ்வுக்காக பிளவுபட்டுவிடாதீர்கள். ஒன்றுபட்டு நமது முதுசத்தைப் பாதுகாக்கின்ற அதேவேளை நமது சாய்ந்தமருது மக்களின் அபிலாஷையை வெல்வதற்கு துணைநிற்பதோடு ஏனைய ஊர்களுக்கும் பாதிப்புவராத ஓர் தீர்வைக்கண்டு அன்றுபோல் இன்றும் என்றும் சகோதர வாஞ்சையோடு வாழ்வோம்.

கல்முனை மக்கள்
——————————-
கல்முனை மாநகருக்கு ஏற்படுகின்ற பாதிப்பால் முதலாவது பாதிக்கப்படுவது கல்முனையாகும். அந்த கல்முனையைப் பாதுகாப்பதற்கு கல்முனை மக்கள் ஒற்றுமைப்படாமல் ஏனைய ஊர்களை எங்களுடன் ஒற்றுமைப் படுங்கள்; என்று கூறலாமா? அது நியாயமா? கல்முனைக்கு இந்த அவலநிலை ஏற்படுவதற்கு வழிசமைத்தவர்கள், சாத்தியமில்லாத ஒன்றை அடுத்த கட்சி சாய்ந்தமருதுக்கு வாக்களித்ததுதான் பிரச்சினைக்கு காரணம், என்று கல்முனையிலே வந்து கூறும்போது ‘ நீங்களும் உள்ளூராட்சி அமைச்சரைக் கொண்டு அதே வாக்குறுதியை வழங்கித்தானே இதை பூதாகரமாக்கினீர்கள்; என்று சொல்வதற்கு அருகில் இருந்தவர்களுக்கு தெரியாமல் போனதுமில்லாமல் அந்த அணிக்கு வாக்கு வேறு கேட்கின்றார்களே!

மிகவும் கவலையோடு குறிப்பிடவேண்டியது என்னவென்றால் , கல்முனை 12 ம் வட்டாரத்தில் வாக்குகள் பிரிந்தால் ஒரு ஆசனமும் கிடைக்காது; என்பதை சகல கட்சியினரும் மேடைகளில் பேசிவிட்டு எல்லோரும் எனது கட்சிக்கே வாக்களியுங்கள்; என்கிறார்கள். ஒருவர்கூட விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. இதனால் ஒருவரும் தெரிவுசெய்யப்படப் போவதில்லை. விட்டுக்கொடுத்தால் ஏதோ ஒரு கட்சிக்கு ஆசனம் கிடைக்கலாம். ஆனால் மக்கள் வெற்றிபெறுவார்கள். இப்பொழுது இவர்களும் தோற்று மக்களையும் தோற்கடிக்கப்போகின்றார்கள்.

பகிரங்க வேண்டுகோள்
——————————
இறுதியாக, கல்முனை மாநகர சபை இம்முறை மிகவும் இக்கட்டான கட்டத்தில் தேர்தலை முகம் கொடுக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியல் செய்ய முற்படாதீர்கள். சமூக நன்மை கருதி ஒரு கட்சிக்கு இடம் கொடுத்து ஏனைய கட்சிகள், அணிகள் வாபஸ் வாங்குங்கள். தவறினால் மக்கள் தீர்மானம் எடுங்கள். இதனைச் செய்யத்தவறி நாளை அன்று கச்சேரியை இழந்து பாதுகாத்த நமது முதுசத்தை இழந்து கைசேதப்படும் நிலை நமக்கு வேண்டாம். இந்த விடயத்தில் கல்முனை 100 வீதம் ஒற்றுமைப்பட்டு முன்மாதிரி காட்டுங்கள். அவ்வாறு ஒற்றுமைப்படாவிட்டால் அடுத்த ஊர்கள் ஒற்றுமைப்பட்டு கல்முனையைப் பாதுகாக்க உங்களுடன் ஒன்றுசேர நீங்கள் கோரமுடியுமா? என சிந்தியுங்கள்.

 கல்முனையும் பாதுகாக்கப்பட வேண்டும். சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளும் நிறைவேற வேண்டும். எல்லோரும் ஒற்றுமைப்பட்டு சாதிக்க முற்படுவோம்.  வாக்குகளுக்கு சொந்தக்காரர் கட்சிகளுமல்ல, அணிகளுமல்ல. நாம்தான். அர்த்தமற்ற உணர்ச்சி  அழிவைத்தரும். அறிவு வெற்றியைத் தரும்.
Previous Post Next Post