திருகோணமலையில் சிறுபான்மை கட்சிகள் கால்பதித்ததன் பின்னரே இனவாத பிரச்சாரங்களும் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.சனிக்கிழமை இரவு கிண்ணியா மகரூப் நகரில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இன்று திருகோணமலையின் அரசியல் வரலாறு தெரியாத சில அரசியல் வியாபாரிகள் ஐக்கியதேசிய கட்சி இம்மாவட்டத்தில் முன்னெடுத்த அரசியலையும் அதன் காலத்தால் அழியாதசேவைகளையும் கொச்சைபடுத்தி பேசுவதுமிகவும் வேடிக்கையாக உள்ளது. எனது தந்தையின் சேவைகளை பற்றி பேசியவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
எனது தந்தை இம்மாவட்டம் முழுவதும் இருபத்திரண்டு புதிய பாடசாலைகளை அமைத்துள்ளார். அதில் மூன்று பாடசாலைகள் எமது சொந்த காணியில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நான் எனது தந்தை செய்த சேவைகளை கூறத்தொடங்கினால் அதற்கு நேரம் இடம் கொடுக்காது. ஆகவே நான் ஐக்கியதேசிய கட்சியின் சேவைகள் பற்றி பேசியவர்களை பகிரங்க விவாதம்ஒன்றுக்குஅழைக்கிறேன். உங்கள் கட்சி செய்த சேவைகளையும் நாங்கள் செய்த சேவைகளையும் ஒரு தராசில் இட்டு பாப்போம். அப்போது புரியும் எது மேலே செல்கிறது எது கீழே செல்கிறது என.
அத்தோடு எமது கட்சி ஆட்சி செய்த காலத்தில் சிங்கள பிரதேசங்களையும் கவனித்தோம் தமிழ் பிரதேசங்களையும் கவனித்தோம் முஸ்லிம் பிரதேசங்களையும் கவனித்தோம் எப்போது எனது தந்தையின் மறைவின் பின் இங்கு சிறுபான்மை கட்சிகள் காலடி எடுத்து வைத்ததோ அன்றே எமது மாவட்டத்தில் இனவாத செயற்பாடுகளும் ஆரம்பமாகின.
எப்போது இவர்கள் உரிமைகளை பேசி உறுப்பினர்களை பெற்றுக்கொண்டு அதை பேரம் பேசினார்களோஅன்றே எமது எமது சமூகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டன என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.