Top News

ஹக்கீம் தான் முழங்காலிடச் செய்துள்ளார் என்று பார்த்தால் சபீக் ரஜாப்தீனே முழங்காலிடச் செய்யப்போகிறார்!



ஹக்கீம் தான் முழங்காலிடச் செய்துள்ளார் என்று பார்த்தால் சபீக் ரஜாப்தீனே முழங்காலிடச் செய்யப்போகிறார், உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்,  மன்னிப்பு கேட்பது மாத்திரம் போதுமாகிவிடாது

தற்போது சபீக் றஜாப்தீன் கிழக்கு மாகாண மக்களைப் பற்றி முகநூலில் பதிவிட்ட கருத்துக்கள் சர்ச்சையை தோற்றுவித்துள்ளன. அவர் கிழக்கை வெற்றி கொண்டு, கிழக்கானை முழங்காலிடச் செய்யப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்று இப்படித் தான், மு.காவிலுள்ள சிலர் கிழக்கு மாகாண மக்களை கணக்கு போட்டு வைத்துள்ளனர். கோபம் தலைக்கேற உண்மையை கக்கியுள்ளார். பானையில் உள்ளது தானே, அகப்பையில் வரும்..

மு.கா என்ற கட்சியின் பலமே கிழக்கு மாகாணம் தான். அமைச்சர் ஹக்கீமுக்கு கண்டி மாவட்டத்தில் தேசிய கட்சிகளினால் வழங்கப்படும் பாராளுமன்ற ஆசனம் கூட, கிழக்கு மாகாண மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு அல்லது இதர கட்சிகளுக்கு அவசியம் என்ற காரணத்தாலானாகும். இப்படியான நிலையில் கிழக்கானை வெற்றிகொண்டு எங்கள் காலடியில் வீழ்த்துவோம் என கூறுவதை ஒரு போதும் ஏற்க முடியாது.

கிழக்கு மாகாண மக்கள் அமைச்சர் ஹக்கீமுக்கு வாக்களிப்பதன் மூலம் அமைச்சர் ஹக்கீமின் ஏலப் பொருளாக பாவிக்கப்படுகிறார்கள் என்று பரவலாக பேசப்படுகிறது. அவர் ஒரு கட்சியின் தலைவர் என்ற வகையில் ஓரளவு சகித்துக் கொள்ளலாம்.  இப்போது பார்த்தால், அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் கூட, கிழக்கு மாகாண மக்களை ஒரு அடிமை போன்று நோக்குகிறார்கள். இதனை பார்த்துக்கொண்டு இனி மேலும் கிழக்கு மாகாண மக்கள் பொறுமையோடு இருந்தால், அவர்களைப் போன்ற ஏமாளிகளும் ரோசம் அற்றவர்களும்  வேறு யாரும் இருக்க முடியாது. கிழக்கு மாகாண மு.கா உயர் பீட உறுப்பினர்களு மானம் என்ற ஒன்று இருந்தால், அவருக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கட்டும் பார்ப்போம்.

இப்படியான ஒருவர் இக் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருக்க ஒரு போதும் பொருத்தமானவரல்ல.  சில வேளை பலரதும் நிர்ப்பந்தத்தினால், தேர்தல் காலம் என்பதை கருத்தில் கொண்டு, அவர் மன்னிப்பு கேட்கலாம். இவர் மன்னிப்பு கோருவதால் இவரது மனநிலை ஒரு போதும் மாற்றமடையப்போவதில்லை. இவர் மு.கா என்ற கட்சியிலிருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும். அது ஓரளவு தீர்வாக அமையும்.

இவர் மீது மு.கா எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்காது என்றே நம்பப்படுகிறது. இது பற்றியெல்லாம் பேசினால் அமைச்சர் ஹக்கீமின் வாய்க்குள் இருந்து முத்துக்கள் கொட்டிவிடும். அதனால் அவர் எதுவும் பேச மாட்டார். அவருக்கு இதுவெல்லாம் ஒரு பொருட்டல்ல. இச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஹக்கீம் சபீக் ரஜாப்தீன் மீது நடவடிக்கை எடுப்பாராக இருந்தால், அது கிழக்கு மாகாண மக்களின் பெரும் ஆதரவை பெறும். அது தேர்தல் வெற்றியிலும் நேர் தாக்கத்தை செலுத்தும். இந்த வகையில் சிந்தித்து காய் நகர்த்தப்பட்டலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Previous Post Next Post