Top News

இருபது வருடங்களாக கோமாவில் இருந்தவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னரே விழித்துள்ளனர்



இருபது வருடங்களாக கோமாவில் இருந்தவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னரே விழித்துள்ளனர் என ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை காலை கிண்ணியா மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

 அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நல்லாட்சி அரசாங்கத்தின் சலுகைகளை பெற்றுக்கொண்டு சேவை செய்வதாக கூறி உங்கள் முன் வாக்கு கேட்டுவரும் சிறுபான்மை கட்சிகளின் உறுப்பினர்கள் கடந்த இருபது வருடங்களாக கோமாவிலா இருந்தனர்? நாங்கள் எதிர்கட்சியாக இருந்த காலப்பகுதியிலும்  அவர்கள் அமைச்சர்களாகவே இருந்தனர். மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்கள் அவர்களிடமே காணப்பட்டன. இருந்தும் அவர்களால் நாம் ஆட்சியில் இல்லாத இருபது வருடங்களாக ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஏன் என்றால் அவர்கள் சேவை செய்ய கூட அவர்களுக்கு ஐக்கியதேசிய கட்சியின் ஆட்சி தேவைப்படுகிறது.

கோமாவில் இருந்து விழித்த அவர்கள் இத்தேர்தல் வந்ததன் பின்னரே சுயநினைவுக்கு திரும்பி உங்கள் வீடுகளுக்கு வந்து வாக்கு கேட்பதோடு தோணி வலை தையல் இயந்திரம் போன்ற வாழ்வாதார உதவிகளை தேர்தல் விதிமுறைகளை மீறி வழங்கி வருகின்றனர். சகல் அதிகாரங்கள் இருந்தும் இருபது வருடங்களாக மக்களுக்கு சேவை செய்ய முடியாதவர்கள் ஏன் இன்று மட்டும் இவ்வாறான வாழ்வாதார உதவிகளை செய்ய வேண்டும் என்பதை மக்கள் உணர வேண்டும்.

இந்த உள்ளூராட்சி, மாகாணசபை அதிகாரங்களை ஐக்கியதேசிய கட்சிக்கு தந்து பாருங்கள் உங்களுக்கு தோணி வலை அல்ல கடலையே உங்களுக்காக   தருகின்றோம். அதன்பின் உங்களின் வாழ்வாதாரங்களை நீங்களே பார்த்துக்கொள்ளும் நிலைக்கு உங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம்.

ஊடகப்பிரிவு
Previous Post Next Post