ஆண்கள் துணையின்றி இந்திய பெண்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சிறுபாண்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதி ஞாயிறன்று ரேடியோவில் பேசிய பிரதமர் மோடி, ஹஜ் யாத்திரைக்கு செல்லும் முஸ்லிம் பெண்கள் ஆண்கள் துணையுடன் தான் செல்ல வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியிருப்பதாக தெரிவித்தார். அதன்படி 45 வயதிற்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் இனி ஆண்கள் துணையின்றி ஹஜ் யாத்திரை செல்லலாம் என்று கூறப்பட்டது.
மேலும், வழக்கமாக, ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பம் செய்தவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், பெண்களுக்கு அதில் இருந்து விலக்கு அளித்து, அவர்களை சிறப்பு பிரிவில் அனுமதிக்கும் படி பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியா மற்றும் சவூதி அரேபியா இடையேயான இந்தாண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. மெக்கா நகரில் மத்திய சிறுபாண்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் சவூதி மந்திரி முகம்மது பெண்டன் ஆகியோர் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது தொடர்பாக முக்தார் அப்பாஸ் நக்வி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
இந்தியாவிலிருந்து ஹஜ் யாத்திரை செல்பவர்கள் கடல் மார்க்கமாக செல்லும் போது பயணச்செலவு குறைகிறது. இதை மீண்டும் செயல்படுத்தினால் வறுமையில் உள்ள முஸ்லிம்களும் ஹஜ் செல்ல வசதியாக இருக்கும். இதற்கு சவூதி அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது. இதில் உள்ள தொழில்நுட்ப கூறுகளை ஆய்வு செய்த பின்னர், வரும் ஆண்டுகளில் கடல் மார்க்கமாக ஹஜ் யாத்திரை நடைபெறும்.
இந்திய பெண்கள் இனி ஆண்கள் துணையின்றி ஹஜ் யாத்திரை செல்லலாம். அவர்களுக்காக தனி தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். மேலும், அவர்களுக்காக பெண் உதவியாளர்களை நியமிக்க சவூதி அரசு முன்வந்துள்ளது.