ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 31ஆம் திகதி காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரது விஜயத்தின் போது நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அதிகளவான முஸ்லிம்கள் பங்கேற்ற கூட்டமாக வரலாற்றில் பதிவாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன காத்தான்குடிக்கு வருகைத்தரவுள்ளார். பி.ப. 4 மணிக்கு பிரதான கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் அதிகளவான முஸ்லிம்கள் பங்கேற்ற கூட்டமாக வரலாற்றில் பதிவாகும் என நம்புகின்றோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம்கள் எதிர்த்தனர். அவ்வாறான நிலையில் அவர் காத்தான்குடிக்கு வந்த போது அவரது கூட்டத்துக்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வந்தனர். பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் காரில் செல்லும் போது அவர் தனக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு என்ற உணர்வையே மறந்து என்னுடன் பல விடயங்களை கூறினார். அத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் முஸ்லிம்கள் தொடர்பில் அவர் வைத்துள்ள தப்பான அபிப்பிராயத்தை குறித்த காத்தான்குடி கூட்டம் இல்லாமல் ஆக்கியிருக்கும்.
தற்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காத்தான்குடிக்கு வருகைத் தரவள்ளார். சிறுபான்மை மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அவரை ஆட்சியில் அமர்த்தியவர்கள் சிறுபான்மை சமூகத்தினரே. இந்நிலையில் சிறுபான்மை மக்களின் ஆதரவை மீண்டும் நிருபிக்கின்ற வகையில் காத்தான்குடி கூட்டம் அமையும்.
காத்தான்குடி நகர சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிச்சயம் வெல்லும். அவ்வாறு வெற்றி பெற்றால் அது தேசிய ரீதியில் பேசப்படும் ஒரு முக்கிய பேசுபொருளாக மாறும். அது எமது சமூகத்துக்கும், காத்தான்குடி மக்களுக்கும் ஏராளமான நன்மைகளை பெற்றுத் தரும். ஜனாதிபதி முஸ்லிம்கள் பற்றி சிந்திக்கும் போது காத்தான்குடி மக்கள் தன்னுடன் உள்ளார்கள் என்பதை எப்போதும் மறக்க மாட்டார். – எனத் தெரிவித்தார்.