ஒரு ஆண் வசதியும் உடல் ஆரோக்கியமும் இருக்கும் பட்சத்தில் விரும்பினால் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை திருமணம் முடிக்கலாம் என்று இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. இந்த அனுமதியை உலக முஸ்லிம்களில் 90 சதவீதமான பேர் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் ஒரு மனைவியையும் அதற்கு பிறக்கும் குழந்தைகளையும் படிக்க வைத்து ஒரு நிலைக்கு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும் அனேக முஸ்லிம்களுக்கு. எனவே இஸ்லாம் அனுமதித்தாலும் இந்த வாய்ப்பை பலரும் பயன் படுத்துவதில்லை.
சவுதியில் கூட மிக சொற்பமான நபர்களே பலதாரமணம் புரிபவர்களாக உள்ளனர். உலகம் முழுவதுமே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடே மிகைத்துள்ளதால் அது சவுதியிலும் பிரதிபலிக்கிறது. மேலும் குழந்தைகள் பெரியவர்களாக ஆனவுடன் தந்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் திருமணத்தை வெறுக்கின்றனர். முதல் மனைவியும் அனுமதிப்பதில்லை. நம் நாட்டிலும் முஸ்லிம்கள் இந்த பலதார மணத்தை சற்று தூரமாக்கியே வைத்துள்ளனர். இது பரவலாக உலகம் முழுவதும் உள்ளது.
ஆனால் சவுதியில் அதிசயமாக கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சில கல்லூரிப் பெண்கள் பலதாரமணத்தை ஆதரித்து அறிக்கை விட்டுள்ளனர். ட்விட்டர் குழுமத்தில் இந்த செய்தி சுற்றுக்கு விடப்பட்டதால் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த கருத்துகளுக்கு சவுதி பெண்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது.
'இந்த நாட்டில் திருமணம் ஆகாமல் தேங்கி கிடக்கும் பல லட்சம் முதிர் கன்னிகளின் விடிவு பலதார மணத்திலேயே உள்ளது.' என்று பெண்கள் தரப்பிலிருந்தே கோரிக்கை வந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பலதார மணத்தால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்: அவர்களின் உரிமை மறுக்கப்படுகின்றனது: என்ற வாதம் பெண்ணிய வாதிகளால் வைக்கப்படுகிறது. ஆனால் திருமணம் ஆகாமல் வீட்டிலே முடங்கிக் கிடக்கும் அந்த முதிர் கன்னிகளுக்கு என்ன பதிலை அவர்கள் வைத்துள்ளார்கள்?
மெக்காவில் மட்டும் 396248 முதிர் கன்னிகள் உள்ளதாக அரசு அறிக்கைகள் கூறுகின்றன. அதே போல் ரியாத் மற்றும் தம்மாம் ஏரியாக்களில் மட்டும் 327427 முதிர் கன்னிகள் இருப்பதாக அரசு கூறுகிறது. பெண்ணியம் பேசுபவர்கள் இந்த முதிர் கன்னிகளுக்கு என்ன பதிலைத் தரப் போகிறார்கள்?
சுலதான் அல் சுபயீ சவுதி நாட்டவர்: பலதார மணம் குடும்பத்தில் பல சிக்கல்களை கொண்டு வருகிறது. எனவே நான் ஒரு மனைவியுடனேயே வாழ்க்கையை ஓட்டுகிறேன்.
இகோயிங் சவுதி நாட்டவர்: முதல் மனைவியையும் பின்னால் கட்டக் கூடிய மனைவிகளையும் சமமாகவும் நீதமாகவும் நடத்தத் தெரிந்தவர்களே பலதார மணத்தின் பக்கம் செல்ல வேண்டும். இஸ்லாம் இதனையும் விரும்புகிறது.
சாமியா சவுதி பெண்மணி: பலதார மணம் வேறொரு சிக்கலையும் கொண்டு வரும். ஒவ்வொரு மனைவிக்கும் எட்டு குழந்தைகள் என்றால் ஒரு ஆணுக்கு 32 குழந்தைகள் ஆகி விடும். இந்த அதீத மக்கள் பெருக்கமானது மேலும் பல சிக்கல்களை கொண்டு வரும் என்கிறார்.
பெண்கள் அதிகமாக மஹர் கேட்பதும் வாழ்வாதார செலவுகள் அதிகரித்து விட்டதும் சவுதி இளைஞர்கள் திருமணம் முடிக்க தடையாக இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. எனவே அரசு சவுதி இளைஞர்ளுக்கு திருமண உதவி திட்டங்களை இன்னும் அதிகமாக்கி அந்த முதிர் கன்னிகளின் வாழ்வில் வசந்தம் வீசச் செய்வார்களாக!
தகவல் உதவி:
சவுதி கெஜட்
இதையும் கொஞ்சம் பார்க்கலாமே....
எனது நண்பர் ஒருவருக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆகி விட்டது.
ஆனால் குழந்தை பாக்கியம் கிடையாது. குறை பெண்ணிடத்தில் உள்ளதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது.
நான் அவரிடம் 'இஸ்லாம் பலதார மணத்தை ஆதரிப்பதால் உங்கள் மனைவியின் சம்மதத்தோடு ஏன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளக் கூடாது?' என்று வினவினேன்.
'இஸ்லாம் அனுமதித்தாலும் எனது மனம் இடம் கொடுக்கவில்லை. எனது மனைவிக்கு செய்யும் துரோகமாக அதைப் பார்க்கிறேன். தமிழ் முஸ்லிம்களாகிய நாம் இந்த பழக்கத்தை கடைபிடிப்பதில்லை' என்றார்.
நான் ஒன்றும் சொல்லவில்லை. அமைதியாகி விட்டேன்.
அந்த காலத்திலிருந்தே உலக மதங்கள் அனைத்தும் பலதார மணத்தை ஆதரித்தே வந்துள்ளன என்பதற்கு பின் வரும் ஆதாரங்கள் சாட்சிகளாக உள்ளன.
1. மன்னன் சாலோமோனிற்கு எழுநூறு மனைவிகளும் முன்னூறு வைப்பாட்டிகளும் இருந்தாகச் சொல்லப்படுகிறது. (இராஜாக்கள் 11:3).
2. மன்னன் தாவீதிற்கும் பல மனைவிகளும் பல வைப்பாட்டிகளும் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. (சாமுவேல் 5:13).
3. பல்வேறு மனைவிகளுக்குப் பிறந்த மகன்களுக்கிடையே சொத்துக்களை எவ்வாறு வினியோகிப்பது என்பது பற்றிய கட்டளைகளும் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றது. (உபாகமம் 22:7).
4. மனைவியின் சகோதரியை போட்டி மனைவியாக்கிக் கொள்வதற்கு மட்டுமே தடையுள்ளது. (லேவியராகமம் 18:8).
5. அதிகப்பட்சம் நான்கு மனைவிகள் இருக்கலாம் என 'தல்முதிக் (Talmudic) பரிந்துரைக்கிறது.
பதினாறாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய யூதர்கள் பலதார மணப் பழக்கத்தைப் பின்பற்றியே வந்தனர். கிழக்கத்திய யூதர்கள், அவர்கள் இஸ்ரேலுக்கு வந்துக் குடியேறும் வரை, தொடர்ந்து பலதார மணத்தை அனுசரித்து வந்தனர். இஸ்ரேலில் சிவில் சட்டத்தின் கீழ் அங்கே பிற்பாடு அது தடைசெய்யப்பட்டது. இருப்பினும், சிவில் சட்டத்தை மிஞ்சும் மதச்சட்டத்தின் கீழ் பலதார மணத்திற்கு அனுமதி நடைமுறையில் இருக்கவே செய்கிறது.
6.' குழந்தையற்ற விதவை, மரணித்த கணவனின் சகோதரனை - அவன் திருமணமானவனாகி இருந்தால் கூட - அவளுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மணக்க வேண்டுமெனக் கூறுகிறது. (ஆதியாகமம் 38: 8-10) (விதவையின் துன்பநிலைகள் என்ற பகுதி காண்க).
7. ஒரு பார்பனர் நான்கு மனைவியரை மணக்கலாம் (விஷ்ணுஸ்மிருதி 24:1)
8. கிருஷ்ணருக்குப் பதினாராயிரம் மனைவிகள் இருந்ததாக இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கூறப்படுகின்றது.
9. அதுபோக ஒரு பெண்ணிற்குப் பல கணவர்கள் (பஞ்ச பாண்டவர்களுக்கு திரௌபதி என்கிற ஒரு மனைவி) இருந்ததாகவும் மகாபாரத்தில் கூறப்படுகின்றது.
10. ராமரின் தகப்பனார் தஸரதன் ஒன்றுக்கு மேற்பட்ட (கிட்டத்தட்ட அறுபதாயிரம்) மனைவிகளைக் கொண்டிருந்தார்.
11. முருகனுக்கும் வள்ளி, தெய்வாணை என இரண்டு மனைவிகள் இருந்தனர்.
இந்த பதிவை எழுதியதால் எல்லோரும் பலதார மணம் செய்து கொள்ளுங்கள் என்று நான் சொல்ல வருவதாக யாரும் நினைக்க வேண்டாம். இறைவனின் கட்டளையானது எந்த காலத்திலும் ஏதோ ஒரு வகையில் மனித குலத்துக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும் என்ற கருத்தையே சொல்ல வந்தேன்.