வை எல் எஸ் ஹமீட்
சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி சபைக்கான போராட்டமும் அதன் ஓர் அங்கமாக இத்தேர்தலில் பள்ளி நிர்வாகம் ஓர் சுயேற்சைக் குழுவைக் களமிறக்கி இருப்பதும் நாம் அறிந்ததே!
இச்சுயேற்சைக் குழுவிற்கான வெளிப்படையாக கூறப்பட்ட நோக்கம், மொத்த சாய்ந்நதருது மக்களும் இச்சுயேற்சைக் குழுவை ஆதரிப்பதன்மூலம் தனியான பிரதேசசபையை ஆதரிக்கின்றார்கள்; என்ற செய்தியை முழு நாட்டிற்கும் தெரிவிப்பதாகும்.
அதேநேரம் சாய்ந்தமருதில் சுமார் 90 வீதமான ஆதரவுத் தளத்தை இதுவரை கொண்டிருந்த மு காங்கிரசை, இதுவரை எத்தனையோ உத்திகள் பாவித்தும் உடைக்க முடியாமல்போன, சாய்ந்தமருதில் மு கா வின் பெரும்புள்ளிகள் என்று கருதப்பட்டவர்களை பிரித்து தன் அணியில் சேர்த்தும் அசைக்க முடியாமல்போன அதன் ஆதரவுத்தளத்தை ஊர் உணர்வை ஓர் ஆயுதமாக பயன்படுத்தி உடைப்பதற்கு ஓர் அமைச்சர் பின்னணியில் இருந்து செயற்படுகின்றார்; அந்த அமைச்சரின் ஆதரவுப் பின்னணியைக் கொண்டவர்கள்தான் இச்சுயேற்சையில் களமிறக்கப்பட்டிருக்கின்றார்கள்.
வெளிப்படையில் இது உள்ளூராட்சிசபைக்கான ஓர் போராட்டமாக சித்தரிக்கப்பட்டாலும் மு கா வை அழிப்பதற்கான அந்த அமைச்சரின் சூழ்ச்சியே இங்கிருக்கின்ற உண்மையான யதார்த்தமாகும்; என்ற ஒரு பலமான, பரவலான குற்றச்சாட்டும் இருக்கின்றது.
நோக்கத்தைத் தோற்கடித்த ஆரம்ப பிரகடனங்களும் கூற்றுக்களும்
------------------------------------------------
சாய்ந்தமருதில் எந்தக் கட்சியும் அரசியல் செய்யக்கூடாது. தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது; என்ற பள்ளி நிர்வாகத்தின் ஆரம்ப பிரகடனங்களும் பேட்டிகளும் பகிரங்க கூற்றுக்களும் எந்த நோக்கத்திற்காக சுயேற்சைக் குழு களமிறக்கப்பட்டதாக கூறப்பட்டதோ அந்த நோக்கத்தை ஆரம்பத்திலேயே தோற்கடித்து விட்டன.
ஒரு தேர்தலில் நாம் நமக்கு விரும்பிய ஒரு கட்சியை/ சுயேற்சைக் குழுவை, அதன் வேட்பாளர்களை வாக்களிப்பதன் மூலம் தெரிவு செய்கின்றோம். இங்கு நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டிய சொல் " தெரிவு" என்பதாகும். ' தேர்தல்' என்பது " தேர்வு" செய்தலாகும். அதாவது பலவற்றிற்கு மத்தியில் இருந்து ஒன்றை ' தேர்வு' செய்கின்றோம்; அதாவது " தெரிவு" செய்கின்றோம்.
"ஒன்று" மாத்திரம் இருந்தால் தேர்வு அல்லது தெரிவு என்ற சொற்கள் பொருந்துமா? ஒன்றே ஒன்றை ஒருவரிடம் கொடுத்து இதில் ஒன்றைத் தெரிவு செய்யுங்கள்; என்று கூறமுடியுமா? அவ்வாறு கூறினால் நம்மைப் பார்த்து என்ன கேட்பார்? 'சுகத்துடன்தான்' பேசுகின்றீர்களா? என்று கேட்கமாட்டாரா? எனவே, வேறு எந்தக் கட்சியும் போட்டியிடக்கூடாது; வாக்குக் கேட்கக் கூடாது; என்ற பள்ளிவாயில் நிர்வாகத்தின் அறிவித்தல் முழுநாடும் அறிந்த விடயமாகும். போதாக்குறைக்கு தேர்தல் ஆணைக்குழுவும் அதன் பங்கிற்கு இந்த பள்ளிவாயிலின் நடவடிக்கைகளுக்கு அதன் வக்புசபைக்கான கடிதத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக சாட்சியம் கூறிவிட்டது. ( இக்கடிதம் தொடர்பாக பின்னர் விபரமாக வருகின்றேன்) எனவே, பள்ளிவாயிலின் இவ்வறித்தல் இது தேர்தல் அல்ல; என்று நிரூபித்து விட்டது. இதன்பின் ' தேர்தலில் வெற்றிபெற்றோம்' என்ற சொல் பொருந்துமா? சிந்தியுங்கள். எந்த நோக்கத்திற்காக சுயேற்சை களமிறக்கபட்டதோ அதுவல்ல நோக்கம் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. நோக்கம் தோல்வியடைந்து விட்டது.
சுயேற்சைக்குழுவின் வெற்றியின் மூலம் எதிர்பார்க்கப்படும் அனுகூலங்கள்
----------------------------------------
1) சட்டரீதியான அனுகூலங்கள்
எதுவுமில்லை. ஏனெனில் ஒட்டுமொத்த சுயேற்சைக்குழுவும் வெற்றபெற்றாலும் சாய்ந்தமருதுக்கு சுயமாக பிரதேசசபை கிடைப்பதற்கு எதுவித சட்ட ஏற்பாடுகளும் இல்லை. அல்லது அவ்வெற்றி சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேசசபை வழங்குவதற்கு சட்டரீதியாக அரசை நிர்ப்பந்திக்காது.
2) அரசியல் ரீதியான அனுகூலங்கள்/பிரதிகூலங்கள்
------------------------------------------------
இது இரண்டுவகை
(1) சாய்ந்தமருது மக்கள் இப்பிரதேச்சபைக் கோரிக்கையை ஓட்டுமொத்தமாக ஆதரிக்கிறார்கள்; என்ற செய்தியை முழு நாட்டுக்கும் சொல்வது. மேலே கூறியதுபோல் அந்த நோக்கம் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டது. அடுத்த கட்சியை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தடுக்கின்ற தொடர்ச்சியான வன்செயல்கள் அதை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. மக்களின் ஆதரவு இருந்தால் ஏன் இவர்கள் வன்செயலில் இறங்க வேண்டும்? அடுத்த கட்சிகள் அரசியல் செய்வதைத் தடுக்க வேண்டும்?
ஏற்கனவே, மொத்த சாய்ந்தமருது மக்களும் இக்கோரிக்கையை ஆதரிக்கிறார்கள்; என்ற கருத்துத்தான் வெளியிடங்களில் இருக்கின்றது. ஆனால் பள்ளிவாசலின் நடவடிக்கைகளும் தொடர்வன்செயல்களும் அதில் இப்போது சந்தேகத்தை உருவாக்குகின்றன. மட்டுமல்லாமல், எந்தவொரு ஜனநாயகத்திற்காக போராடுகின்ற, குரல்கொடுக்கின்ற அமைப்புகளும் இச்சுயேற்சைக்குழு வெற்றிபெற்றால் அது மக்களின் தீர்ப்பாக இச்சூழ்நிலையின்கீழ் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அல்லது, இவை எதுவும் எமது நோக்கமல்ல. மு கா வைத் தோற்கடிப்பதுதான் எமது நோக்கம்; என்றால் மேல்கூறப்பட்ட பரவலான குற்றச்சாட்டு உண்மையாகும்.
(2) வெற்றிபெற்றால் மாநகர சபையில் பங்கெடுப்பெதால் ஏற்படக்கூடிய அனுகூலங்கள்/ பிரதிகூலங்கள் ( கல்முனை மாநகரசபைத் தேர்தலும் சூழ்ந்துள்ள ஆபத்துக்களும்- எனும் தலைப்பில் இன்ஷாஅல்லாஹ் ஒரு தனியான கட்டுரை எழுத உள்ளேன். அதில் இந்த விடயம் அலசப்படும்)
வன்முறைக் கலாசாரமும் பள்ளிவாசலும்
------------------------------------
சில அரசியல் வாதிகள் வன்முறைக் கலாசாரத்தில் இறங்குவதுண்டு. அவ்வாறானவர்களை மூன்றாம்தர அரசியல்வாதியாகத்தான் ஜனநாயக உலகம் பார்க்கும். ஆனால் இங்கு பள்ளிவாசலின் பெயரால் களமிறங்கியுள்ள சுயேற்சைக்குழுவுக்கு மட்டும்தான் வாக்களிக்க வேண்டும். அவர்கள் மட்டும்தான் கூட்டம்போட வேண்டும். அவர்களுடைய பேச்சுக்களை மட்டும்தான் கேட்க வேண்டும். வேறுயாரும் எந்த தரப்பினரும் அவ்வாறான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கெதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்படும்; அவர்களது வீடுகள் உடைக்கப்படும்; கூட்டங்களுக்கு கல்லெறியப்படும். அதை ஒரு காடையர் கூட்டம் செய்து சாய்ந்தமருது மக்கள் செய்தார்கள்; என்று நம் தாய் ஊராம் சாயந்தமருதின் பெயர் நாறடிக்கப்படும்; என்றால் இது எவ்வளவு பெரிய ஜனநாயக அத்துமீறல்.
அவ்வளவு பலம்வாய்ந்த பிரபாகரனின் எதிர்ப்புக்கு மத்தியிலும் த வி கூட்டணி ஒரு காலத்தில் தேர்தல் களம் கண்டிருக்கின்றது. ஆனால் இன்று சாய்ந்தமருதில் நடைபெறுவது அதைவிடவும் பலமான அராஜகமாகத் தெரியவில்லையா? இதை ஏதாவது ஒரு அரசியல்கட்சி செய்தால் அனைத்துத் தரப்பினரதும் கண்டனத்தை அது ஈர்த்திருக்கும். பாராளுமன்றத்திலும் அது பேசப்பட்டிருக்கும். பள்ளிவாசல் சம்மந்தப்பட்டிருப்பதால் அனைத்துத் தரப்பினரும் அமைதியாக இருக்கின்றனர்; எங்கே, பள்ளிவாசலைப்பற்றிப் பேசினால் அது நாட்டு முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்திவிடுமோ! என்று. ஆனால் இனவாதிகள் இதனை எப்பொழுது கையில் எடுப்பார்கள்; என்று கூறமுடியாது.
இஸ்லாம் வன்முறையை போதிக்கும் மார்க்கம்; என்று ஏற்கனவே பரப்புரை செய்கிறார்கள். இங்கு ஒரு பள்ளிவாசலின் பெயரால் வன்முறை அதுவும் தனது சொந்தமக்களுக்கெதிரான மிகவும் அநாகரீகமான வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. இளம் விடலைப்பையன்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு இவ்வன்முறைக் கலாசாரத்திற்காக பாவிக்கப்படுகின்றார்கள். இனவாதிகள் எதிர்காலத்தில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றன; என்ற அவர்களது குற்றச்சாட்டுகளுக்கு சாய்ந்தமருதுப் பள்ளிவாசலை உதாரணமாக காட்டப்போகின்றார்கள். இதனால் மொத்த முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்படப் போகின்றது.
உலகில் பெரும்பாலும் ஒரு பலம்வாய்ந்த சக்தி பின்னால் இருந்து இயக்காமல் வன்செயல்கள் நடைபெறுவதில்லை. எங்காவது, எப்போதாவது சுயமாக ஒரு வன்செயல் ஏற்படுமானால் அது நீடிக்காது. சாய்ந்தமருதில் இப்போராட்ட ஆரம்பித்ததிலிருந்தே வன்செயல்கள் தொடர்கின்றன. எத்தனை பேர் எதை எழுதினாலும் அது நிறுத்தப்படவில்லை. பொலிசாரோ நீதிமன்றமோ தலையிட்டும் இந்த வன்செயல்கள் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை; என்றால் பின்னாலிருந்து ஒரு சக்தி இயக்கவில்ல; என்று யாராவது நினைத்தால் அவரது சிந்திக்கும் ஆற்றலுக்காக கவலைப்படுவதைத்தவிர வேறு வழியில்லை.
அந்த சக்தி நேரடியாக பள்ளிவாசலாக இல்லாமலிருக்கலாம். ஆனாலும் பள்ளி நிர்வாகம் அந்த சக்தியை அறிந்திருக்கவில்லை, அதற்கு அனுசரணை வழங்கவில்லை; என்பது ஏற்புடையதல்ல. அவ்வாறு பள்ளிவாசல் நிர்வாகம் அனுசரணை வழங்கவில்லையாயின் அவர்கள் பகிரங்க அறிவித்தல் விடுக்கலாம், " இந்த வன்செயல்களை பள்ளிநிர்வாகம் அங்கீகரிக்கவில்லை. இது தொடருமானால் இச்சுயேற்சைக்குழுவில் இருந்து தன்னைத்தூரப்படுத்துகின்ற பகிரங்க அறிவித்தலை விடுக்கவேண்டிவரும்"; என்று எச்சரிக்கை விடுக்கலாம். பள்ளிவாசல் நிர்வாகம் நினைத்தால் இவ்வன்செயல் கட்டுப்படுத்தப்பட முடியாததல்ல.
ஆனால் நிர்வாகம் " நாங்கள் செய்யவில்லை, மக்கள் செய்கின்றார்கள்" என்று மக்கள்மீது பழியைப்போட்டு தப்பித்துக்கொள்ளப் பார்க்கின்றார்கள். அதாவது பள்ளிவாசல் நிர்வாகத்தில் இருப்பவர்களெல்லாம் அகிம்சை வாதிகள். சாய்ந்தமருது மக்கள் காடையர்கள்.
என்ன நியாயம் இது. சாய்ந்தமருது மக்களின் வாக்குரிமை, கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவதுமாத்திரமல்லாமல் அவர்கள் " காடையர்கள்" என்ற பெயரைச் சுமக்க வேண்டும். ஆனால் எங்கோ இருந்து ஒரு சக்தி இயக்க, நிர்வாகம் அனுசரணை வழங்க வன்செயல்கள் இடம்பெறவேண்டும். நாகரீக உலகம் சாய்ந்தமருது மக்களை காடையர்களாக கணிப்பிட வேண்டும்; ஆனால் காடைத்தனத்தில் ஈடுபட்டவர்களுக்கெதிராக சட்டம் தன்கடமையைச் செய்தால் அவர்களுக்கு ' தியாகிப் பட்டம்' வழங்க வேண்டும். வீடு உடைக்கப்பட்டவனுக்கு, பாதிக்கப்பட்டவனுக்கு நிவாரணம் எதுவுமில்லை. வன்செயல் தொடர்கிறது.
எனதருமை சாய்ந்தமருது மக்களே! நமது சாய்ந்தமருது இவர்கள் வர்ணம் தீட்ட முயல்வதுபோல் " காடையர்களின் ஊர் அல்ல". படித்தவர்கள், பண்பாளர்கள் நிறைந்த ஊர். எத்தனை கலாநிதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள், உயர் அரச உத்தியோகத்தர்கள் நிறைந்த ஊர். இந்த ஊரை வெளிஉலகின் பார்வையில் இவ்வாறான இழிநிலைக்கு இவர்கள் தள்ளிக்கொண்டிருக்கின்றார்கள். இதில் குளிர்காய்வதற்கு எங்கோ ஒரு சக்தி காத்துக் கொண்டிருக்கின்றது.
தேசப்பற்று என்பது ஒரு கடைநிலை அரசியல்வாதியின் கடைசி ஆயுதம் என்பார்கள். அதேபோன்றுதான் இன்று ஊர்ப்பற்றும் பாவிக்கப்படுகின்றது. சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை என்பது வேறு விடயம். சாய்நமருதில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஜனநாயகப் படுகொலை, மனித நாகரீகப் படுகொலை, இவற்றை பள்ளிவாசலின் பெயரால் அரங்கேற்றுவது வேதனை தருகிறது. கலிமாச்சொன்ன உள்ளங்கள் கவலைப்படுகின்றன. அல்லாஹ்வின் வீட்டை அசிங்கப்படுத்துகின்ற உரிமை, அந்த பள்ளிவாயில் இருக்கின்ற ஊரில் அவன் பிறந்துவிட்டான்; என்பதற்காக அவனுக்கு இருக்கமுடியாது. அல்லாஹ்வின் இல்லம் உலகில் உள்ள கலிமாச்சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் சொந்தம். எனவே சிந்தியுங்கள். எனவே, அல்லாஹ்வுக்காக சிந்தியுங்கள். அல்லாஹ்வின் பள்ளிவாயிலின் நாமத்மைப் பாதுகாருங்கள்.
தாயூராக இருந்து குடிபெயர்ந்த ஊர்களுக்கெல்லாம் தாயாக இருந்து வழிகாட்டிய அந்த ஊரின் பெருமையைப் பாதுகாருங்கள்! பாதுகாருங்கள்!! பாதுகாருங்கள்!!!
எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்குத் துணையிருக்கட்டும்.
( தொடரும்)
குறிப்பு: அடுத்த தொடரில் தேர்தல் ஆணைக்குழு பள்ளி நிர்வாகத்தைக் கலைத்ததா? தேர்தலில் வெற்றிபெற்றாலும் சுயேற்சைக்குழு மாநகரசபை செல்லலாமா? போன்ற விடயங்கள் ஆராயப்படும், இன்ஷாஅல்லாஹ்.