Top News

முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பார்க்கப்படுகின்றது



பி. முஹாஜிரீன்


'சர்வதேசத்தின் பார்வையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பார்க்கப்படுகின்றது. அதுபோன்று அக்கட்சி எமது தாய்க்கட்சி. அதனூடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற காரணத்துக்காகவே முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியில் நான் களமிறங்கி சம்மாந்துறையின் அபிவிருத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றேன்' என சம்மாந்துறை 6ஆம் வட்டாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சபிக் இஸ்மாயில் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச சபைத்தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒலுவிலில் திங்கட்கிழமை (15) மாலை நடைபெற்றபோது, ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

வேட்பாளர் சபிக் இஸ்மாயில் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.

'உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதற்கு ஏன் விரும்பினீர்கள் என்று பலர் என்னிடம் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கான பதிலை கூற வேண்டிய தேவை எனக்கேற்பட்டுள்ளது. எமது நாட்டில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரே ஒரு கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை நான் முதலில் எற்றுக் கொண்டுள்ளேன் என்பதாலும், எமது நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் முஸ்லிம்களுக்கான ஒரு கட்சியாகவும் எமது சமூகத்துக்கான தலைவராகவும் முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைவர் ரஊப் ஹக்கீமையும்தான் இன்று சர்வதேசம் ஏற்றுள்ளதுஎன்பதாலுமேயாகும். 

மேலும், இந்த கட்சியிலிருந்து பிரிந்து சென்று கட்சிகளை ஆரம்பித்தவர்கள் தேசிய காங்கிரஸ் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்றும் நாமங்களை சூட்டியுள்ளனர். இந்த கட்சிகளின் தலைவர்கள் முஸ்லிமாக இருந்தாலும். அவர்கள் தமது கட்சிக்கு முஸ்லிம் என்ற நாமத்தை சூட்டுவதற்கு தைரியமில்லாதவர்களாக, அதனை சூட்டுவதற்கு அச்சப்படுகின்றனர். முஸ்லிம் என்ற சொல்லை கட்சியில் சேர்த்துக்கொள்ள அச்சப்படுபவர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளை எப்படித் தீரத்துக் கொள்வார்கள். ஆனால், சர்வதேசம் எமது சமூகத்துடன் பேசவேண்டுமென்றால் முதலில் வந்து சந்திப்பது முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியைத்தான். அதனால்தான் எமது சமூகம் சார்ந்த விடயங்களை பேசுவதன்றாலும் கலந்துரையாடுவதென்றாலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால்தான் முடியும். முஸ்லிம் காங்கிரஸ் என்று சொன்னாலே அது முஸ்லிம்களின் கட்சி என்று யாரும் இலகுவாக புரிந்து கொள்வார்கள். ஆனால் பிரிந்து சென்று கட்சி உருவாக்கியுள்ளவர்களது கட்சிகளின் பெயரைச் சொல்லி, அதனை விளக்கபப்டுத்தியே இது முஸ்லிம்களுக்கான கட்சியாக சர்வதேசத்திற்கு காட்ட வேண்டியிருக்கிறது.

இன்று முஸ்லிம் காங்கிரஸ் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியில் சங்கமித்துள்ளதாகவும் பலர் பலவாறாக பேசுகின்றனர், விமர்சனங்களை தெரிவிக்கின்றனர். முஸ்லிம் காஙகிரஸின் சின்னம் மரமாக இருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் என்பது மரத்தின் பெயரல்ல கட்சியின் கொள்கைக்காக வைத்த பெயர்தான். அதற்கு கிடைத்த சின்னம்தான் மரம். சுpன்னம் மாறினாலும் எண்ணம் மாறவில்லை. இன்று சாய்ந்தமருது மக்களின் கொள்கைக்காக கிடைத்திருக்கின்ற சின்னம் தோடம்பழம். எனவே அவர்களது கொள்கையை வைத்து தோடம்பழ சின்னம் கிடைக்கவில்லை. அந்த கட்சிக்காக கிடைத்த சின்னம்தான் தோடம்பழம். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கொள்கை இன்று கொள்கையாகத்தான் இருக்கின்றது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. இந்த வாதங்களை கட்சியை விட்டு பிரிந்து  சென்று கட்சிகளை ஆரம்பித்தவர்கள் கூறுவதற்கு ஒன்றுமில்லாமல் கதைக்கின்ற ஒரு பேசுபொருளாக நான் பார்க்கின்றேன். நாங்களும் கட்சியின் ஆதரவாளர்களும் இந்த விடயத்தில் தெட்டத் தெளிவாக இருக்கின்றோம்.
 
இந்தத்தேர்தலை தேசிய ரீதியில் நான் அவதானிக்கின்ற போது எனது பார்வையில் மூன்று கட்சிகளின் தலைவர்களின் பலத்தை காட்டுவதற்கான தேர்தலாகும். இத்தேர்தலில் கூடுதலான ஆசனங்களைப்பெற்று வெல்லப் போவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவா, பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவா என்பதுதான். ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தலில் வெல்லப்போவது உறுதியாகிவிட்டது.

தேர்தல் காலம் வந்தால் தேர்தல்விஞ்ஞாபனம் என்ற போர்வையில் செய்ய முடியாத நடைமுறப்படுத்த முடியாதவைகளை குறிப்பிட்டு விஞ்ஞாபனம் வெளியிடுவார்கள். நான் கண்ட அனுபவம் தேர்தல் காலத்தில் வெளியிடப்பட்ட எத்தனையோ தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டவர்கள் வெற்றி பெற்றதும் அவர்களினால் வெளியிடப்பட்ட விஞ்ஞாபனங்கள் இதவரை அமுல் நடந்ததாக நான் அறியிவில்லை கிடப்பில் கிடப்பதையே நான் கண்டிருக்கின்றேன்.

எங்களைப் பொறுத்தவரையில் சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறவில்லை இலக்கு நோக்கிய பயணத்தில் யானைச்சின்னத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் காலத்தில் வெல்லமுடியாத மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை அதிலும் குறிப்பாக கடந்த பொதுத் தேர்தலில் எனது சம்மாந்துறை கிராமத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பக்கம் சம்மாந்தறைக் கிராமமே சாய்ந்தவிட்டது என்ற கோசத்துக்குள்ளே, கட்சியின் தலைமை ரஊப் ஹக்கீமின் வழிகாட்டலின் கீழ் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்தது பெரும் சாதனையாகும். இன்று சம்மாந்துறை மக்கள் தெளிவாக இருக்கின்றனர். எங்களது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற எண்ணத்துடன் இறைவனுடைய அருளினால் களமிறங்கியுள்ளோம். 

கட்சியின் உள் வீ்ட்டுப் பிரச்சினைகளை உள்ளே இருந்து கொண்டு தீரக்காமல் வெளியில் சென்று திர்க்க முடியாது. ஒரு மரம் முறையாக காய்க்கவில்லை என்பதற்காக அதனை வெட் நினைப்பது புத்திசாலித்தனமல்ல. அதற்குரிய பசளை, உரம், கிருமித்தாக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்தி பிரச்சினைகளை தீர்த்தவிட்டால் அது முறையாக காய்க்கும் அவ்வாறுதான் இன்றுள்ள எமது நிலமை. குட்சியிலிருந்து வெளியில் சென்றவர்கள் பிரிந்து சென்றாலும் அவர்களுக்குள் ஒற்றுமையில்லை. இவ்வாறானவர்கள் மக்களை எப்படி ஒற்றுமைபடுத்த முடியும். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக எமது பிரதேசத்தில் தேர்தலில் களமிறங்கியுள்ள எனது வெற்றிக்கும் சக வேட்பாளர்களின் வெற்றிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அகியோரின் ஒத்துழைப்பும் இருக்கின்றது.
 
எனவே, இறைவனின் நாட்டமும் எங்களுடைய தேட்டமும் இன்ஷா அல்லாஹ் பன்னிரென்டு ஆசனங்களைப் பெற்று சம்மந்துறை பிரதச சபையின் ஆட்சி அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் சார்பான ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக வெற்றி கொள்ளும் என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்' என்றார்.




Previous Post Next Post