மத்தள விமான நிலையம், ஹில்டன் ஹோட்டல், ஹைட் ஹோட்டல், திருமலை எண்ணெய்க்குதம், காப்புறுதிக்கூட்டுத்தாபனம், இலங்கை போக்குவரத்து சபை, ரயில்வே திணைக்களம், மின்சார சபை, நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை உள்ளிட்ட தேசிய சொத்துகளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் அவை விற்பனை செய்யப்படவுள்ளதாக கூட்டு எதிரணியி்ன் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நல்லாட்சி அரசாங்கத்திற்கு 2015 ஆம் ஆண்டு மக்கள் ஆணை கிடைத்தது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நல்லாட்சி, ஜனநாயகம், சட்ட ஆட்சி, நல்லிணக்கம், ஊழல் மோசடிகளற்ற ஆட்சி, அபிவிருத்தியான நாடு போன்றவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கினர். எனவே அதற்கு மக்கள் ஆணை வழங்கினர். எனினும் அரசாங்கம் அவ்வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற வில்லை.
தேர்தலின் பின்னர் பிரதம நீதியரசரை நீக்கிவிட்டு பாராளுமன்றில் குறைந்தளவான ஆதரவுள்ள ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கியதுடன் நல்லாட்சி என்ற விடயம் இல்லாது செய்யப்பட்டது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது இரண்டரை வருடங்கள் காலம் தாழ்த்தியதனால் ஜனநாயகப் பண்பிலிருந்தும் அரசாங்கம் விலகியுள்ளது.
மேலும் நாட்டில் ஒவ்வொரு தரப்பினருக்கும் மாறுபட்ட வகையில் நீதி செலுத்தப்படுகிறது. கூட்டு எதிர்க்கட்யிலுள்ளவர்களுக்கு ஒருவகையிலும் அரசாங்க தரப்பில் உள்ளவர்களுக்கு மற்றுமொருவகையிலும் நீதி செலுத்தப்படுகிறது. கூட்டு எதிர்க்கட்சியிலுள்ளவர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் இரு வாரங்களில் வழக்குத் தாக்கல் செய்கிறார். ஆனால் மத்திய வங்கியில் பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளதுடன் அது தொடர்பிலான ஆவணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் அதற்கு எதிராக சட்டமா அதிபர் நடவடிக்கை எடுப்பதாக இல்லை. எனவே சட்ட ஆட்சியும் இல்லாது செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கம் நல்லிணக்கம் பற்றிப்பேசியபோதிலும் நல்லிணக்கமும் அமுலில் இல்லை. இனவாத பிரச்சினை மீண்டும் நாட்டில் எழுந்துள்ளது. காலி கிந்தோட்டையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தைக் குறிப்பிடலாம். அத்துடன் மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்து. குறித்த மோசடியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் 10 உறுப்பினர்கள் வரையில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். ஆகவே ஊழல் மோசடியற்ற ஆட்சியிலிருந்தும் அரசாங்கம் தவறியுள்ளது.
அத்துடன் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தது. எனினும் கடந்த மூன்று ஆண்டுகளில் 14.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளிடமிருந்து கடனாகப் பெறப்பட்டுள்ளன. அக்கடன் மூலம் எவ்வித அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் கடன் பெறப்பட்ட போதிலும் அதன்மூலம் ஏராளமான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த அரசாங்கம் ஆரம்பித்த வேலைத்திட்டங்களையே நல்லாட்சி அரசாங்கம் தற்போது திறந்து வைக்கிறது.
எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு தாரை வார்த்துக்கொண்டு வருகிறார். அம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இன்னும் பல தேசிய சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்தள விமான நிலையம், ஹில்டன் ஹோட்டல், ஹைட் ஹோட்டல், திருமலை எண்ணெய்க்குதம், காப்புறுதிக்கூட்டுத்தாபனம் என்பவற்றை யும் விற்பனைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை போக்குவரத்து சபை, ரயில்வே திணைக்களம், மின்சார சபை, நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை உள்ளிட்ட வளங்களும் விற்பனை செய் யப்படவுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுமாகவிருந்தால் மேற்சொன்ன வளங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.