ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் மாஞ்சோலை, பதுரியா பிரதேசத்திலே பெரியதொரு எல்லை பிரச்சினை இருந்து கொண்டு இருக்கின்றது. அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என அமைச்சர் றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டமாவடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
எல்லை பிரச்சினை நடந்து கொண்டு இருக்கும் போது சட்ட விரோதமாக மதில் ஒன்று கட்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இது தொடர்பாக இந்த பிரதேசத்தில் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தை வைத்துக் கொண்டு எதையும் செய்யாமல் இருக்கும் நிலவரத்தையும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
பதுரியா, மாஞ்சோலை பிரதேசம் கோறளைப்பற்று பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய, வறுமைகோட்டிற்கு கீழே வாழ்கின்ற மக்கள் ஏராளமாக காணப்படுகின்றனர். அவர்களுக்கு தொழிற்சாலைகளை அமைத்து வருமானத்தை ஈட்டக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும்.
மீறாவோடை பிரதேசத்தையும் அபிவிருத்தி செய்து வியாபார மத்திய நிலையமாக மாற்றக்கூடிய நிலையை உருவாக்குவதற்கு ஓட்டமாவடி பிரதேச சபையை கைப்பற்றுவதற்கு மக்கள் ஆணையை தருவதன் மூலம் அதிகாரங்கள் எங்களுக்கு கிடைக்குமாக இருந்தால் இப் பிரதேசம் அபிவிருத்தியடையும்.
ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் உள்ள காணிப்பிரச்சினை தொடர்பாகவும் பிரதேசத்தில் உள்ள உயர் அதிகாரிகள் பழிவாங்கப்படுகின்ற நிலைமைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக பிரதேசத்தில் மாற்றம் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.