பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நிதிமோசடி வழக்கில் உயர்நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ள அவுஸ்திரேலிய வர்த்தகர் பிரெய்ன் ஷாடிக் தனது நிறுவனம் உதய கம்மன்பிலவுக்கு எந்தவொரு அட்டோனி தத்துவத்தையும் வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
2000ம் ஆண்டு பங்கு கொடுக்கல் வாங்கலில் 21 மில்லியன் மூபாவை மோசடி செய்ததாக உதய கம்மன்பிலவுக்கும் மற்றும் ஒருவருக்கும் எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் சாட்சியான அவுஸ்திரேலிய வர்த்தகர் பிரெய்ன் ஷாடிக் நேற்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
அவர் தனது சாட்சியத்தின் போது, உதய கம்மன்பிலவுக்கு அட்டோனி தத்துவத்தை வழங்கும் எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திடவில்லையென்றும், இந்த கொடுக்கல் வாங்கலை மேற்கொள்வதற்கு தனது கையொப்பம் மோசடியான முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், பிரதிவாதி சார்பில் சம்ர்ப்பிக்கப்பட்ட ஆவணம் போலியானது என்றும், தனது கையொப்பம் போலியான முறையில் இடப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உதய கம்மன்பில 20 மில்லியன் ரூபாயை மோசடி செய்திருப்பதுடன் டிஜிட்டல் நொமினிஸ் நிறுவனப் பங்குகளை தம்மிக்க பெரேரா என்ற வத்தகருக்கு விற்பனை செய்வதில் சிட்னி ஜயசிங்க என்பவருடன் இணைந்து மோசடியான முறையைக் கையாண்டு 21 மில்லியன் ரூபாயை ஏமாற்றியிருப்பதாகவும் சட்டமா அதிபர் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் போலியான அட்டோனி தத்துவத்தைப் பயன்படுத்தி அவுஸ்திரேலிய வர்த்தகரான பிரேய்ன் ஷாடிக் என்பவருக்குச் சொந்தமான பங்குகள் பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் திகதி உதய கம்மன்பில கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் சாட்சியாளர் மீதான குறுக்கு விசாரணை இன்யை தினமும் நடைபெறுகிறது.
இந்த மோசடி வழக்கு தொடர்பாக உதய கம்மன்பிலவுக்கு சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.