இன ஐக்கியமானது சமாதானம் சகவாழ்விற்கு இன்றியமையாததாகும். ஒரு யுத்தத்தின் முடிவும் அதனை யொட்டியெழுந்த அமைதி நிலையும் இன்று எமது மக்களின் சகஜமான வாழ்வொன்றுக்கு அடிகோலியிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தான் எமது கிராமங்களை பகுதிகளை புனரமைத்து அபிவிருத்தி செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த உள்ளூராட்சித் தேர்தல் எம்மை எதிர்கொண்டுள்ளது. இந்தத் தேர்தலில் நாம் எடுக்கும் ஓர் தீர்க்கமான முடிவிலே தான் எமது பிரதேசத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது.
இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ மஸ்தான் காதர் தெரிவித்தார். இன்று முல்லைத்தீவு, குமிழமுனை, கோம்பாவில் பகுதிகளில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே இக்கருத்துக்களை தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது.
இந்தப் பகுதி மக்களின் ஜீவனோபாயத் தொழிலாக விவசாயம் விளங்குகிறது. இந்த தொழிலை வினைத்திறனுடன் செய்கின்ற பொழுது அதிக பலாபலன்களை பெற்றுக்கொள்ள
முடியும் .
எமது நாட்டின் பாரம்பரியத்தொழிலான விவசாயத்தையும் விவசாயிகளையும் காத்து நடக்கவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உண்டு. எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுக்க நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.
எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் கெளரவ துமிந்த திஸாநாயக்க அவர்கள் இந்த நாட்டின் விவசாயத் துறையின் அமைச்சராக இருப்பதால் இந்தப் பகுதி விவசாயிகளுக்கு அரசாங்கத்தால் என்னென்ன உதவிகளைச்செய்யமுடியுமோ அத்தனை உதவிகளை வழங்க நாம் தயாராகவுள்ளோம்.
எனவே எனது அன்பான மக்களே!
எதிர்கொள்ளும் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்து எமது பகுதி அபிவிருத்தியை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.