படைவீரர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சியனே புத்திஜீவிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு ஒன்றிற்கு ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் அமெரிக்காவிலிருந்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
போரின் போது உயிர்த் தியாகம் செய்து சேவையாற்றிய படையினரை இலக்கு வைத்து இந்த அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கின்றது. இவ்வாறான அழுத்தங்களை எதிர்க்கும் வகையில் மக்கள் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
மக்கள் மஹிந்த அரசாங்கத்தை தெரிவு செய்த காரணத்தினாலேயே மூன்றாண்டுகளில் போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டது. இவ்வாறான சரியான கொள்கைகளை பின்பற்றக்கூடிய ஆட்சியாளர்கள் தற்போது கிடையாது.
போர் இடம்பெறும் எந்தவொரு நாட்டிலும் ஊழல் மோசடிகள் இடம்பெறும் அது வழமையானதேயாகும். கடந்த அரசாங்கம் பாரியளவில் சேவையாற்றிய போதிலும் சில சில குறைபாடுகள் காணப்பட்டதனை மறுப்பதற்கில்லை.
எனினும் இந்த அரசாங்கம் உலகின் தோல்வியடைந்த நிறுவனங்களின் மீது நம்பிக்கை கொண்டு அதன் அடிப்படையில் கொள்கைகளை வகுத்து அமுல்படுத்தி வருகின்றன.
இந்த அரசாங்கம் பழிவாங்கல்களில் அதிகளவு கவனம் செலுத்துவதனால் நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.