அரசாங்கம் குப்பைமேட்டை போன்றது என ஜனாதிபதி கூறுகின்றார். நாம் அவரை குப்பை மேட்டுடன் கூட்டணி அமைக்கக் கோரினோமா என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ. நாய்களுடன் உறங்கினால் எமது உடலிலும் உண்ணிகள் ஒட்டிக்கொள்ளும் என்பதை ஜனாதிபதி நினைவில் வைத்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பாணந்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
அண்மையில் நிதி அமைச்சர் மூலமாக கொண்டுவந்த மதுபான நிலைய நேர எல்லை மற்றும் பெண்களை மதுபான நிலையங்களில் வேலைக்கு அமர்த்துவது குறித்த வர்த்தமானியை தான் நீக்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் என்பதை நான் செய்திகளில் அறிந்துகொண்டேன்.
இதேபோல் அண்மையில் பியர் மதுபான விலைகளை குறைப்பதாக நிதி அமைச்சர் கூறிய நிலையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். பியர் விலைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என கூறினார். ஆனால் இதுவரையில் அவை நடந்ததாக தெரியவில்லை.இவற்றை உருவாக்குவதும் பின்பு நீக்கும் பெருமையும் ஜனாதிபதிக்கே சாரும். இதனை நான் ஆரம்பத்திலேயே கூறினேன். இன்று அதுவே நடைபெற்றுள்ளது.
மேலும் இந்த அரசாங்கம் குப்பை மேட்டைப்போன்றது என ஜனாதிபதி கூறுகின்றார். இந்த அரசாங்கத்தில் ஊழல் நிறைந்து காணப்படுவதாகவும் கூறுகின்றார். யார் இந்த குப்பை மேட்டு அரசியலில் இணைந்து கொண்டது. யார் குப்பைகளை கூட்டணி சேர்க்கக் கூறியது. ஜனாதிபதி ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். நாய்களுடன் உறங்கினால் எமது உடலிலும் நாய் உண்ணிகள் ஒட்டிக்கொள்ளும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். இந்த அரசாங்கமும் அவ்வாறனதே. மறுபுறம் இந்த அரசாங்கத்திற்கென ஒத்துப்போகும் நபர்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. அவர் பாராளுமன்றத்தில் நடந்துகொள்ளும் விதமும், அவரது பேச்சுக்களும் ஒரு பிரதமருக்கானதல்ல.
பாடசாலை விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் கூச்சலிடுவதைப் போல அவரும் பாராளுமன்றத்தில் கூச்சலிடுகின்றார். அவருக்கு நடனமாடவும், சண்டை போடவும் மட்டுமே நன்றாக தெரிந்துள்ளது. நெளிவு சுழிவுவுடன் நடனமாடி சமூக தளங்களில் காண்பிக்கவே அவருக்கு முடிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.