Top News

கல்வியின் மூலம் தெல்தோட்டையை கட்டியெழுப்புவதே பிரதான இலக்கு - சகீப் சாம் நிஜாம்



கல்வி எழுச்சியின் மூலம் தெல்தோட்டை சமூகத்திற்கு பரந்தளவில் சேவையாற்றி பிரதேசத்தை ஒழுக்கமுள்ள கல்விச் சமூகமாக கட்டியெழுப்புவதே மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான இலக்கு என பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபைக்காக கரகஸ்கட-கபடாகம வட்டாரத்தில் மணி சின்னத்தில் போட்டியிடும் அஷ்ஷெய்க் சகீப் சாம் நிஜாம் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம் கொலனி இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஓய்வுபெற்ற அதிபர் சாம் நிஜாமின் புதல்வர் அஷ்ஷெய்க் சகீப் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தெல்தோட்டை பிரதேசத்தில் இன்னும் குறைபாடுகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றதென்றால் மாறி மாறி 67 வருடங்களாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் அசமந்தப்போக்காகும். 

சிறுவயதுமுதல் முஸ்லிம் கொலனியில் எனது நண்பர்கல் மிக நெருக்கமாக பழகி வருகின்றனர். அந்த வகையில் இங்குள்ள பிரச்சினைகளை நான் அறிந்திருக்கிறேன், அதனடிப்படையிலேயே இம்முறை தேர்தலில் களமிறங்க தீர்மானித்தேன்.

கடந்த காலங்களில் நாம் எமது பிரதேசத்திலிருந்து பிரதேச சபைக்கு பலரை அனுப்பியிருக்கிறோம். முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஹனீபாவின் சேவைகள் பெரிதும் பாராட்டத்தக்கது. அத்தோடு, பலர் இந்த பகுதிகளுக்கு சேவையாற்றியிருக்கின்றனர். அவர்களை கெளரவப்படுத்த வேண்டும்.

அத்தோடு, இங்கு பல குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக குடிநீர் பிரச்சினை குறித்து முறைப்பாடுகள் கூறப்பட்டன. கடந்த காலங்களில் லூல் கந்துர பிரதேசத்திலிருந்தே இங்கு நீரை பெற்றுக்கொண்டிருந்தோம். ஆணால், அங்கிருந்து நீரை பெற்றுக்கொள்வதற்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. விவசாயம் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி இனவாத கண்டோட்டத்தில் இந்த தடை ஏற்படுத்தப்பட்டது. 

நீர் வழங்களுக்கு பொறுப்பானவரால் இனவாதத்தை முறியடிக்கத் தெரியவில்லை. இந்த இரட்டை அங்கத்துவ தொகுதியில் என்னோடு களமிறங்கியிருக்கும் சாந்த பண்டார நூல்கந்துர பிரதேசத்தை சேர்ந்தவரென்பதால் அங்கிருந்து எந்த தடையுமின்றி நீரை முஸ்லிம் கொலனி, தெல்தோட்டை நகர், சிங்கள குடியேற்றம் மற்றும் பத்தாம் பள்ளி பகுதிகளுக்கு கொண்டுவரும் பொறுப்பை அவருக்கு விட்டிருக்கிறோம். அந்த ஊர் மக்கள் அவருடன் இருக்கின்றனர். சிங்கள இனத்தவர் முன்னின்று இந்த காரியத்தை முடித்து தந்தால் இனரீதியான பிரச்சினைகளுக்குமுடிவுகட்டி எமது இலக்கை இலகுவாக எட்டலாம்.

அத்தோடு, கல்வி விடயம் குறித்து பேசப்பட்டது. நான் ஏற்கனவே முஸ்லிம் கொலனிக்கு பொது நூலகம் ஒன்றை அமைப்பது குறித்த யோசனையை எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியிருக்கிறேன். அத்தோடு, இருக்கின்ற பாலர்பாடசாலைக்கு உதவியளிப்பது, மற்றும் தேவையேற்படின் இன்னுமொரு பாலர்பாடசாலையை உருவாக்கவிருக்கிறோம். இதற்கப்பால், மாணவர்களுக்கான சுய கற்றலுக்கு ஒரு நிலையத்தை உருவாக்குவதும் எனது யோசனையில் உள்ளீர்த்திருக்கிறேன். அத்தோடு, தெல்தோட்டை முஸ்லிம் மத்தியக் கல்லூரி மற்றும் ரலிமங்கொட அல் அக்பர் வித்தியாலயம், பட்டயகம தோட்டம் காயத்திரி வித்தியாலயம் மற்றும் நாரஹேங்கன தமிழ் வித்தியாலயத்திற்கும் ஐந்தாம் தரத்திற்கு இலவச கருத்தரங்குகள் நடத்துவதற்கும் பிரதேசத்தில் சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புகளுக்கான வகுப்புகளை நடத்துவதற்கும் திட்டமிட்டிருக்கிறோம். நான் தேர்தலில் வெற்றிபெறாவிடினும் இந்த வேலைத்திட்டங்க முன்னெடுக்கவுள்ளேன். தேர்தல் வெற்றி அவ்வேலைகளை மேலும் பரந்தளவில் மேற்கொள் உதவும்.

இது தவிர, முஸ்லிம் கொலனி, பத்தாம்பள்ளி, ரலிமங்கொட பகுதிகளுக்கு சுகாதார வைத்திய அதிகார மையங்கள் மற்றும் குடும்பநல தாதியர்கள் இல்லாத நிலைமை பல வருடங்களாக நீடிக்கிறது. சுகாதார அமைச்சை கையில் வைத்துக்கொண்டிருப்பவர்கள் என்ன செய்கின்றனர் என கேள்வியெழுப்ப விரும்புகிறோம். நாம் இந்த விடயங்கள் பற்றி பேசியபின் சுகாதர அமைச்சையும் நீர் வழங்கல் அமைச்சையும் கையில் வைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்களால் செய்துமுடிக்கலாம் என தாடால்படால் என தேர்தல் இலஞ்சமாக அவ்வேலைகளை செய்ய முற்படலாம். கடந்த 3 வருடங்களாக அவ்வமைச்சை கையில் வைத்துக்கொண்டிந்து இப்போது வழங்க முற்படின் இவர்களின் கையாலானத்தனம் குறித்து நீங்கள் மேலும் தெளிவு பெற முடியும்.

எனவே, இந்த வட்டாரத்தில் போட்டியிடும் ஒரு இளம் பாட்டதாரி ‍வேட்பாளராக நான் இருக்கிறேன். என்னால், இப்பிரதேசத்தை கல்வியால் கட்டியெழுப்ப முடியும் என்கிற திராணி இருக்கிறது. எனவே, பட்டதாரியொருவரிடம் இந்த வட்டாரத்தை ஒப்படைக்க மக்கள் விடுதலை முன்னணியின் மணி சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார். 

முஹம்மட் சுஹைல்
Previous Post Next Post