(எம்.எஸ்.எம். ஸாகிர்)
ஜ.தே.கட்சி முஸ்லிம்களுக்கு எந்தக் காலத்திலும் துரோகம் செய்யாது. எப்பொழுதும் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யாத ஒரே ஒரு தேசிய கட்சி ஜ.தே.கட்சியே என கல்முனை தொகுதி பிரசார இணைப்பு செயலாளர் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஜ.தே, கட்சி சார்பில் கல்முனை 12 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் எம்.முஹிஸ் மற்றும் ஏனைய வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜயவர்தன, ஆர் பிரேமதாச போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு போதும் துரோகம் செய்யவில்லை. அவர்களுடைய ஆட்சி காலத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டன. முஸ்லிம் பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்றன.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கூடிய அபிவிருத்தியும் முக்கிய பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டன. பாடசாலை அபிவிருத்திகளுக்கு பெரும் பங்காற்றிய கட்சி - ஜ.தே.கட்சி. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினுடைய தலைமையில் இருந்து வரும் ஜ.தே. கட்சி, முஸ்லிம்களுக்கு எதுவித துரோகமும் செய்யவில்லை.
ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்து, இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார். மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களின் இருப்பிடமே ஒரு கேள்விக்குறியாக இருந்தது. பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு, முஸ்லிம்களின் உடமைகள் பறிக்கப்பட்டு, தமிழ் முஸ்லிம்கள் தலை நிமிர்ந்து வாழ முடியாத அளவுக்கு மஹிந்தவின் ஆட்சி, அதிகாரம் இருந்தது.
ரணில் விக்ரமசிங்க அந்தத் தடைகளை தகர்த்தெறிந்து இன்று நாட்டில் எதுவித சண்டை சச்சரவுகளும் இல்லாமல் முஸ்லிம்களை கூறுபோட்ட பொது பல சேனாவை அடக்கி, நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேலோங்கச் செய்து அனைத்து இன மக்களும் சுமுகமாக வாழக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளார்.
பிணை முறி விவகாரத்தில் பிரதமர் ஊழல் செய்துள்ளதாக குற்றம் சுமத்தி வரும் சதிகாரர்களுக்கு தக்க பாடம் புகட்டவுள்ளார். எனவே நடைபெற இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமது கட்சியான ஐ.தே.கட்சியை வெற்றிபெறச் செய்து, மிகக் கூடிய ஆசனங்களைப் பெற்று, இந்தக் கல்முனை மாநகர சபையை ஜ.தே.கட்சி கைபற்றி அபிவிருத்தியை நோக்கி இட்டுச் சென்று வளமிக்க மாநகரமாக மாற்ற அனைவரும் கைகோர்ப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச். எம். எம். ஹரீஸ், ஜ.தே.கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம். எஸ். அப்துல் றஸ்ஸாக், வேட்பாளர்களான றகுமத் மன்சூர், ஆரிப் சம்சுதீன், ஏ.எம் றோசன், பளில் நிஸார், ஜௌபர் ஹாஜி மற்றும் பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.