Top News

விரைவில் கைதாக போகும் பிரபல அமைச்சர்?



பிரபல அமைச்சர் ஒருவரையும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரிய போதிலும் சட்டமா அதிபர் இதுவரை பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு - 7, கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள கோடிஸ்வர வர்த்தகருக்கு சொந்தமான வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போது கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்களை எடுத்துச் சென்ற தொடர்பாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இருவரை கைது செய்வதற்கான கோரிக்கையே முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைச்சர் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், தேசிய பட்டியல் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி, அமைச்சர் பதவியை பெற்றவர் என கூறப்படுகிறது.

கறுவாத்தோட்டம் ஹேவா எவனியூ பகுதியில் வசித்த வந்த கோடிஸ்வர வர்த்தகர் தனக்கு சொந்தமான வீட்டையும் சொத்துக்களையும் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு வழங்கியிருந்தார்.
தனித்து வாழ்ந்து வந்த அந்த வர்த்தகர் கடந்த 2011ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், சில தினங்களுக்கு பின்னர் சடலம் மீட்கப்பட்டது.
இந்த சொத்துக்களுக்கு கிருளப்பனை பிரதேசத்தில் தேயிலை வர்த்தகர் ஒருவரும், தேங்காய் வர்த்தகர் ஒருவரும் சொத்துக்களுக்கு உரிமை கோரியதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குறித்த வீட்டுக்கு கறுவாத்தோட்டம் பொலிஸார் பாதுகாப்பு வழங்கிய நிலையில், பிரபல அரசியல்வாதி தனது மனைவியுடன் வீட்டுக்கு சென்று ஜீப் வண்டி ஒன்றையும் 12 இலட்சம் ரூபா பெறுமதியான பழைய வீட்டு தளபாடங்கள் மற்றும் 12 பெறுமதியான மதுபான போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் உயிரிழந்த வர்த்தகரான கே.சி.நடராஜாவின் வங்கி கடன் அட்டையை பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.
பாதுகாப்பு கமராவில் பதிவான சிறப்பு அங்காடிகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் காட்சிகளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post