மட்டு மாவட்டத்தின், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைக்குட்பட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த வட்டவான் இறாலோடை கடற்கரை வீதியானது பிரதேச சபையினால் கிறவலிடப்பட்டு புனரமைக்கப்பட்டதுடன், கல்வெட்டுக்கள், நீர்வடிந்தோட செய்யும் கொங்கிறீட் வீதி அமைப்புக்களும் நிர்மானிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அப்பகுதியில் காணிகளை கொள்வனவு செய்த தனிநபர்கள் அத்துமீறி வீதியை அடைத்து நிரந்தர தூண்கள் இட்டும், முன்னராக அமைக்கப்பட்ட வீதியை JCB இயந்திரங்கள் கொண்டு அகற்றியதாகவும், இது தொடர்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பிரதிநிதிகள், வாகரை பிரதேச சபை செயலாளர், சமூக அமைப்புக்கள் என பலரிடமும் இவ்வீதியினை பயன்படுத்தும் மக்கள் இவ்வீதியினை திறந்து தருமாறு பல முறைப்பாடுகளை தெரிவித்து வந்ததாகவும் கூறுகின்றனர்.
இருந்தபோதும், இதனை ஆராயும் பொருட்டு மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சீ.யோகேஸ்வரன், முன்னால் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் மற்றும், வாகரை பிரதேச செயலாளர் ஆகியோர் அன்மையில் இதனை பார்வையிடுவதற்காக நேரடியாக சென்று குறித்த வீதியினை மறித்து போடப்பட்டுள்ள தடையினை அகற்றி, வீதியினை மக்கள் பயன்படுத்தும் வன்னம் திறந்துவிடுமாறு சம்மந்தப்பட்ட நபர்களிடம் கூறியிருந்தனர்.
இருந்தபோதும் இதுவரை காலமும் இதனை செயற்படுத்த மறுத்துவந்த நபர்கள் தொடர்பாக மீண்டும் முறைப்பாடு அடங்கிய மஹஜர் ஒன்றினை பொதுமக்கள் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் புதிய செயலாளராக தற்போது கடமையாற்றும் ஜே. சர்வேஸ்வரன் அவர்களிடம் வழங்கியிருந்தனர்.
இது விடயமாக உடனடி கவனம் செலுத்திய பிரதேச சபை செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் ஒரு வார காலப்பகுதியில் இவ்வீதியினை திறப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பொதுமக்களிடம் தெரிவித்தார். அதற்கமைவாக இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு கானும் வகையில் களத்திற்கு சென்ற பிரதேச சபை செயலாளர் இவ்வீதியினை திறப்பதற்குரிய நடவடிக்கையினை இன்று களத்தில் நின்று மேற்கொண்டார்.
மேலும், எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இன்றைய தினம் இவ்வீதியினை திறந்து எமக்காக வழங்கப்பட்டுள்ளமையானது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், இதற்காக பிரதேச சபையின் செயலாளருக்கு அனைவரின் சார்பிலும் பெரும் நன்றியினை தெரிவிப்பதாகவும் பொதுமக்கள் கூறினர்.
அத்துடன், இவ்வீதியில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப்பணியின் போது பிரதேச சபையின் செயலாளர், சபை உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர், பொதுமக்கள், மீனவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.